Published : 22 Jun 2015 03:38 PM
Last Updated : 22 Jun 2015 03:38 PM
தடைசெய்யப்பட்ட நட்சத்திர வீரர் நெய்மர் இல்லாமலேயே பிரேசில் அணி வெனிசுலாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
இதனையடுத்து வெனிசுலா அணி வெளியேற கொலம்பிய அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது. காலிறுதியில் பிரேசில் அணி பராகுவேயை சந்திக்க, கொலம்பிய அணி அர்ஜெண்டினாவைச் சந்திக்கிறது.
நெய்மருக்குப் பதிலாக ஆடிய ருபீனோ அடித்த துல்லியமான கார்னர் ஷாட்டை கேப்டன் தியாகோ சில்வா கோலாக மாற்றினார். 9-வது நிமிடத்திலேயே பிரேசில் 1-0 என்று முன்னிலை பெற்றது. பிறகு 52-வது நிமிடத்தில் வில்லியன் அடித்த ‘கிராஸை’ ரொபர்ட்டோ பர்மினோ கோலாக மாற்றினார்.
காலிறுதி அட்டவணை:
சிலி - உருகுவே : புதன் கிழமை
பொலிவியா - பெரு: வியாழக்கிழமை
அர்ஜெண்டின - கொலம்பியா: வெள்ளிக்கிழமை
பிரேசில் - பராகுவே: சனிக்கிழமை
ருபீனோ, மற்றும் கூர்ட்டினோ ஆகியோரது வருகையால் பிரேசில் அணியின் தாக்குதல் ஆட்ட வாய்ப்பு அதிகரித்தது. சில்வா முதல் கோலை அடித்த பிறகு ஸ்டேண்டில் உட்கார்ந்திருந்த நெய்மருக்கு கையை அசைத்து தன் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார்.
முதல் கோலுக்குப் பிறகு ருபீனோ மற்றும் பிலிப் லூயிஸ் ஆகியோர் வெனிசுலாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் முதல் பாதியில் ஒரு கோலுக்கு பிறகு கோல் அடிக்க விடாமல் தடுத்தது வெனிசுலா. 39-வது நிமிடத்தில் வில்லியனும் வெனிசுலா கோல் கீப்பர் அலைன் பரோஜா மட்டும் தனித்து எதிர்கொண்ட அருமையான கோல் வாய்ப்பு பிரேசிலுக்கு கிடைத்தது, ஆனால் கோல் கீப்பர் அலைன் பரோஜா இதில் சோடைபோகவில்லை.
44-வது நிமிடத்தில் வெனிசுலாவுக்கு நல்ல கோல் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியில் கேப்ரியல் சிசெரோ இடது புறத்திலிருந்து ஒரு ஷாட்டை தூக்கி விட்டார். ஆனால் கோலுக்கு வெளியே சென்றது.
பிறகு 52-வது நிமிடத்தில் பிரேசில் 2-வது கோலை சாதித்தது. ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் யுவன் அராங்கோ என்ற வெனிசுலா வீரர் அருமையான பிரீ கிக்கை கோலுக்கு அடிக்க பிரேசில் கீப்பர் ஜெஃபர்சன் அதனை தட்டிவிடும் முயற்சியில் மீண்டும் வெனிசுலா வீரர் மிக்குவுக்கு பந்து வர தலையால் முட்டி ஒரேகோலை அடித்தார்.
கோப்பா அமெரிக்காவின் கடந்த சாம்பியன் உருகுவே என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT