Published : 03 Jun 2015 05:04 PM
Last Updated : 03 Jun 2015 05:04 PM
அமெரிக்க தலைமை பிஃபா ஊழல் விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து பிஃபா தலைவர் பதவியை செப் பிளாட்டர் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து அப்பதவிக்கு போட்டி அதிகமாகியுள்ளது.
5-வது முறையாக சமீபத்தில் பிளாட்டர் பிஃபா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது அமெரிக்க தலைமை ரெய்டில் பிஃபா அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்ட பிறகு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஜூரிச்சில் அவர் தான் பதவி விலகுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.
“பிஃபா அமைப்பில் ஆழமான மறுகட்டமைப்பு தேவை” என்று கூறினார் பிளாட்டர். ஊழல்வாதிகள் பட்டியலிலோ அதனுடன் இணைத்தோ பிளாட்டர் பெயர் வரவில்லை என்றாலும் அவர் திடீர் ராஜினாமா கால்பந்து வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தார் மற்றும் ரஷ்யாவுக்கு உலகக் கோப்பை கால்பந்து தொடர்களை வழங்கியதும், 2010 உலகக் கோப்பை கால்பந்து தொடரை தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கியதிலும் கடும் ஊழல்கள் நடைபெற்றதாக எஃப்.பி.ஐ. கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியது.
இந்நிலையில் பிஃபா தலைவருக்கான புதிய தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று ராஜினாமா செய்த பிளாட்டர் தெரிவித்ததையடுத்து அப்பதவிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யு.இ.எஃப்.ஏ தலைவரும் முன்னாள் பிரான்ஸ் வீரருமான மைக்கேல் பிளாட்டினி, அலி பின் அல் ஹுசைன், போர்த்துக்கீசிய கால்பந்து நட்சத்திரம் லூயி பீகோ, ஆகிய பெயர்கள் உடனடியாக தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் பட்டியலில் வெளியாகியுள்ளது.
பிரேசிலின் லெஜண்ட் மிட் ஃபீல்டர் ஸீகோ, (இவர் தற்போது கோவா கால்பந்து பயிற்சியாளர்) தென் கொரிய அதிகாரி சுங்-மாங் ஜூன் ஆகியோரது பெயர்கள் அடிபட்டாலும், அதிகாரபூர்வமாக எதுவும் வெளியாகவில்லை. தேர்தலுக்கும் சிறிது காலம் பிடிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT