Published : 14 Jun 2015 12:30 PM
Last Updated : 14 Jun 2015 12:30 PM
சிலியில் நடைபெறும் கோபா அமெரிக்கா கால்பந்து பி-பிரிவு ஆட்டத்தில் 2 கோல்கள் பின் தங்கியிருந்த பராகுவே, இடைவேளைக்குப் பிறகு 2 கோல்களைத் திருப்பி அர்ஜெண்டீனா அணிக்கு எதிரான ஆட்டத்தை அபாரமாக டிரா செய்தது.
அர்ஜெண்டீன அணி மிகவும் வலுவான அணி. அதனால் முதல் பாதியிலேயே அதன் சிறந்த வீரர்களான செர்ஜியோ அக்யூரோ மற்றும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி ஆகியோர் 2 கோல்களை அடித்து விட்டனர்.
ஆனால் இடைவேளைக்கு பிறகு ஆச்சரியகரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பராகுவே அணியில் நெல்சன் ஹேடோ வால்டேஸ், லூகாஸ் பேரியஸ் ஆகியோர் 2 கோல்களை திருப்பினர். இதனால் ஆட்டம் 2-2 என்று டிரா ஆனது.
அர்ஜெண்டீனா மிகவும் பிரகாசமாக ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க பரிமாற்றங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
அரைமணி நேரம் கோல் அடிக்கும் முயற்சி பலிக்கவில்லை. அப்போதுதான் அர்ஜெண்டீன ஸ்ட்ரைக்கர் அக்யூரோ, சாதுரியமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பராகுவே வீரர் மிகுவெல் சமூதியோ, தங்களது கோல் கீப்பர் ஆந்தனி சில்வாவுக்கு பந்தை மென்மையாக ஒரு பாஸைச் செய்ய அதனை அர்ஜெண்டீனா வீரர் அக்யூரோ அபாரமாக ஊடுருவிச் சென்று பந்தை கோலுக்குள் திணித்தார். இதனால் பராகுவே அதிர்ச்சியடைந்தது. சமூதியோ பந்தை ஏன் கோல்கீப்பரிடம் திருப்பி அடிக்க முயற்சி செய்தார், அதுவும் அர்ஜெண்டீனா வீரர்கள் அருகில் இருக்கும் போதே, இத்தகைய எதிர்மறை அணுகுமுறை கோலில் போய் முடிந்தது.
5 நிமிடங்கள் சென்ற பிறகு அர்ஜெண்டீனாவின் ஆக்ரோஷ தாக்குதல் ஆட்டம் ஒன்றில் பந்து பராகுவே கோல் எல்லைக்குள் வர ஆஞ்செல் டி மரியா கோலுக்குள் செல்லும் போது மீண்டும் சமூதியோதான் குற்றவாளி ஆனார், அவர் டி மரியாவின் காலை இடறி விட பெனால்டி பகுதியாகையால் பெனால்டி அளிக்கப்பட லயோனல் மெஸ்ஸி 2-வது கோலை அடித்தார்.
பெனால்டி ஷாட்டை மெஸ்ஸி அனாயசமாக கோல் மூலைக்குள் திணித்தார். இதன் மூலம் அர்ஜெண்டீனாவுக்காக 98 ஆட்டங்களில் 46-வது கோலை அடித்தார். ஆனால் பெனால்டி கொடுத்தது தவறு, சமூதியா நியாயமாகவே தடுத்தார் என்று பராகுவே வீரர்கள் நடுவரிடம் புகார் எழுப்பினர்.
இடைவேளைக்குப் பிறகு பெனால்டி கோபத்தில் பராகுவே ஆட்டத்தில் உத்வேகம் புகுந்தது, ஆக்ரோஷமாக ஆடினர். இதனால் ஒரு அபாரமான மூவில் பந்து பராகுவே வீரர் வால்டேஸிடம் வர கோல் பாக்ஸுக்கு வெளியேயிருந்து அபாரமான கோலாக மாறியது.
70-வது நிமிடத்துக்குப் பிறகு மேலும் பராகுவே ஆக்ரோஷம் கூட வால்டேஸ் 2-வது கோலை அடித்திருப்பார், ஆனால் பந்து வெளியே சென்றது. 76-வது நிமிடத்தில் சமுதீயோவின் ஷாட்டை ரொமேரோ தடுத்தார்.
91-வது நிமிடத்தில் திட்டமிட்ட ஒரு பாஸ் மூவில் அர்ஜெண்டீனா வீரர்களைக் கடந்து கோல் அருகே வந்தனர் பராகுவே வீரர்கள். அப்போது பாவ்லோ டா சில்வா தலையால் பந்தை முட்ட, பேரியோஸ் கோலாக மாற்றினார். அர்ஜெண்டீனா அதிர்ச்சியடைந்தது. ஆட்டம் 2-2 என்று டிரா ஆனது.
அடுத்ததாக உருகுவே அணியை செவ்வாயன்று சந்திக்கிறது அர்ஜெண்டீனா. பராகுவே அணியை ஜமைக்கா சந்திக்கிறது. நேற்றைய மற்றொரு பி-பிரிவு ஆட்டத்தில் உருகுவே அணி ஜமைக்காவை 1-0 என்று வீழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT