Published : 03 Jun 2015 03:56 PM
Last Updated : 03 Jun 2015 03:56 PM

நியூஸிலாந்து சுழலில் சிக்கி இங்கிலாந்து தோல்வி: டெஸ்ட் தொடர் சமன்

ஹெடிங்லே, லீட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 199 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நியூஸிலாந்து 2 டெஸ்ட் போட்டிகளுக்கான தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

இங்கிலாந்து மே.இ.தீவுகளூக்கு எதிராகவும் 1-1 என்று சமன் செய்தது, தற்போது நியூஸிலாந்துக்கு எதிராகவும் 1-1 என்று சமன் செய்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் முறையே 350 ரன்கள் எடுக்க, 2-வது இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி ஓவருக்கு 5 ரன்கள் பக்கம் விளாசி வாட்லிங்கின் அபார சதத்துடன் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 454 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 4-ம் நாள் ஆட்டத்தில் 44/0 என்ற நிலையில் கனமழை காப்பாற்ற டிரா நம்பிக்கையுடன் 5-ம் நாள் களமிறங்கியது.

முதல் ஒரு மணிநேரத்திலேயே லைத் (24), பேலன்ஸ் (6) ஆகியோரை டிரெண்ட் போல்ட் அபாரமாக பந்துவீச்சில் வீழ்த்தினார், குறிப்பாக பேலன்ஸிற்கு வீசிய பந்து அற்புதமான ஒரு வாசிம் அக்ரம் பந்தாகும். பவுல்டு ஆவதைத் தவிர வேறு வழியில்லை பேலன்ஸுக்கு பேலன்ஸ் போனது.

இதே காலக்கட்டத்தில் மார்க் கிரெய்க், பிட்சின் ஸ்பாட்களை சாதுரியமாகப் பயன்படுத்தி ஒரே ஓவர் சுழலில் பெல் மற்றும் ஜோ ரூட் ஆகியோரை வீழ்த்தினார்.

பெல் 1 ரன் எடுத்திருந்த போது மெக்கல்லம் லெக் ஸ்லிப்பில் கேன் வில்லியம்சனை கொண்டு வந்து நிறுத்தினார். இது தெரிந்தும் தேவையில்லாமல் அந்தப் பந்தைத் தொட்டார் பெல், தன் விதியை தானே எழுதிக் கொண்டார். ஜோ ரூட்டும் லெக் கிளான்ஸ் செய்வதாக நினைத்து கையில் கொடுத்தார், ஆனால் லேதம் பிடித்த இந்த கேட்ச் சற்றே கடினமானது.

பென் ஸ்டோக்ஸ் களமிறங்கி 5 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து வில்லியம்சனின் சாதாரண பந்துக்கு கட் செய்ய முயன்று எட்ஜ் செய்து ரோன்க்கியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 102/5 என்று தோல்வி முகம் கண்டது.

இங்கிலாந்துக்கும் தோல்விக்கும் இடையே குக் (56) நின்று கொண்டிருந்தார். 171 பந்துகளைச் சந்தித்து பொறுமையின் சிகரமாக மாறியிருந்தார். ஆனால் 9,000 டெஸ்ட் ரன்களை இளம் வயதில் எடுத்த டெஸ்ட் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

வில்லியம்சன் வீசிய ரவுண்ட் த விக்கெட் பந்தை நேராக காலில் வாங்கி எல்.பி.ஆனார். ரிவியூ செய்தார். ஆனால் தீர்ப்பு சாதகமாக அவருக்கு அமையவில்லை.

அமைதியான தொடராகிப்போன மொயீன் அலி 2 ரன்களில் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றியின் உள்ளே வரும் பந்தை தவறாகக் கணித்து ஆடாமல விட ஸ்டம்ப் தொந்தரவுக்குள்ளானது.

ஆட்ட நாயகனாக வாட்லிங்கும், தொடர் நாயகனாக டிரெண்ட் போல்ட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஸ்டுவர்ட் பிராட் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து தன்னால் முயன்ற தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார், ஆனால் வில்லியம்சன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை பின்னால் சென்று டிரைவ் ஆடி, வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார்.

மார்க் உட், ஜோஸ் பட்லர் சிறிது நேரம் இழுத்துப் பார்த்தனர். ஆனால் புதிய பந்து எடுக்கப்பட்டவுடன் சிரமமாக மாறியது. சவுத்தி 17 ரன்களில் மார்க் உட்-ஐ வெளியேற்றினார். அருமையான பந்து எட்ஜ் ஆகி 2-வது ஸ்லிப்பில் கேட்ச்.

ஜோஸ் பட்லர் தனது மூடுக்கு ஏற்ற இன்னிங்ஸை ஆடவில்லை. நிதானமாக ஆடினார், கடைசியில் 73 ரன்கள் எடுத்து மார்க் கிரெய்க் பந்தை ஆடாமல் விட்டு எல்.பி.ஆகி வெளியேற நியூஸிலாந்து இங்கிலாந்தில் ஒரு அரிய வெற்றியை ருசித்தது.

கேன் வில்லியம்சன் 7 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்க் கிரெய்க் 31.5 ஓவர்களில் 73 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போல்ட் 2 விக்கெட்டுகளையும் சவுத்தி, ஹென்றி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x