Last Updated : 09 Jun, 2015 09:55 AM

 

Published : 09 Jun 2015 09:55 AM
Last Updated : 09 Jun 2015 09:55 AM

பிரெஞ்சு ஓபனில் புதிய சகாப்தம் - ‘வாவ்’ரிங்கா

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் ரோலன்ட் கேரஸின் (பிரெஞ்சு ஓபன் நடைபெறும் இடம்) முடிசூடா மன்னனான ஸ்பெயினின் ரஃபேல் நடாலை, ஜோகோவிச் வீழ்த்தியபோது, இந்த முறை ஜோகோவிச்தான் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் என எல்லோரும் பேசினார்கள், எதிர்பார்த்தார்கள். டென்னிஸ் வரலாற்றில் கேரியர் கிராண்ட்ஸ்லாம் (ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய நான்கிலும் பட்டம் வெல்வது) வென்ற 8-வது வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெறுவார் என டென்னிஸ் உலகம் நம்பியது.

ஆனால் போட்டித் தரவரிசை யில் 8-வது இடத்தில் இருந்த ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றில் 4-6, 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்திய போது அனைவருடைய கணிப்பும், எதிர்பார்ப்புகளும் ஏமாற்றத்தில் முடிந்தன. விளையாட்டில் தலை சிறந்த வீரரைவிட, போட்டியின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரரே வெற்றி பெறுவார் என்பதை வாவ்ரிங்கா நிரூபித்துள்ளார்.

மூத்த வீரர் வாவ்ரிங்கா

பிரெஞ்சு ஓபனில் முதல்முறை யாக சாம்பியன் பட்டம் வென்ற 30 வயதான வாவ்ரிங்கா, 1990-க்குப் பிறகு அதில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். இது அவர் வென்ற 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

இதுதவிர தான் விளையாடிய இரு கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று களிலும் வாகை சூடியிருக்கிறார் வாவ்ரிங்கா. ஆனால் 16-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றில் விளையாடிய ஜோகோவிச்சுக்கு, இது 8-வது தோல்வி. அதிலும் பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றில் கடந்த 4 ஆண்டுகளில் 3-வது முறையாக தோல்வியைச் சந்தித்துள்ளார்.

2012, 2014 ஆகிய ஆண்டுகளில் நடாலிடம் தோல்வி கண்ட அவர், இப்போது வாவ்ரிங்காவால் வீழ்த்தப்பட்டிருக்கிறார். இந்த சீசனில் தொடர்ச்சியாக 28 ஆட்டங்களில் வென்றிருந்த ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் வாவ்ரிங்கா.

புதிய சகாப்தம்

களிமண் ஆடுகளமான ரோலண்ட் கேரஸில் கடந்த 10 ஆண்டுகளாக நடால் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் இப்போது அது மாற்றப்பட்டுள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல... 9 முறை சாம்பியன் பட்டம் வென்று முடிசூடா மன்ன னாகத் திகழ்ந்த நடாலை காலிறுதி யில் வீழ்த்தியதன் மூலம் புதிய பிரெஞ்சு ஓபன் சாம்பியனை ரசிகர்கள் காணும் வாய்ப்பை உருவாக்கினார் ஜோகோவிச்.

ஆனால் அதிலும் இன்னொரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் வாவ்ரிங்கா. ஆம், இந்த முறை நமக்குத்தான் பிரெஞ்சு ஓபன் என உறுதியாக நம்பியிருப்பார் ஜோகோவிச். கேரியர் கிராண்ட்ஸ் லாம் கனவோடு களமிறங்கிய அவர் இப்படியொரு அதிர்ச்சி தோல்வியை சந்திப்போம் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார். எது எப்படியோ பிரெஞ்சு ஓபனில் நடாலின் ஆதிக்கம் முடிந்து புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது.

‘பிக் - 4’

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் (ஆஸ்திரேலிய ஓபன்) வென்ற அடுத்த 16 மாதங்களுக்குள் 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருக்கும் வாவ்ரிங்கா, கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள முன்னணி வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

இதற்கு முன்பு ஒரு கட்டத்தில் ரோஜர் ஃபெடரரும் (18 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்), ரஃபேல் நடாலும் (14) மட்டுமே கிராண்ட்ஸ்லாமில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். அதன்பிறகு ஜோகோவிச்சும் (8), பின்னர் ஆன்டி முர்ரேவும் (2) ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகு அவர்கள் 4 பேர் மட்டுமே பெரிய போட்டியான கிராண்ட்ஸ்லாமில் சாம்பியனாகும் வாய்ப்புள்ளவர்களாகக் கருதப் பட்டு வந்தனர். அதனால் அவர்கள் ‘பிக்-4’ என அழைக்கப்பட்டார்கள்.

இப்போது அந்த வரிசை யில் வாவ்ரிங்காவும் இணைந்திருப் பதால் அது ‘பிக்-5’ ஆகியிருக்கிறது. அடுத்ததாக வரும் ஜூன் 29-ம் தேதி தொடங்கவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் களமிறங்க விருக்கிறார் வாவ்ரிங்கா. இதுவரை விம்பிள்டனில் காலிறுதியை தாண்டாதவரான அவர், இந்த முறை ஆதிக்கம் செலுத்துவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வாவ்ரிங்கா கடந்து வந்த பாதை

தனது 15 வயதில் டென்னிஸுக்காக முழு நேர பள்ளிப் படிப்பை துறந்த வாவ்ரிங்கா, முழு நேர டென்னிஸ் பயிற்சியில் முழுவீச்சில் இறங்கினார். அதனால் பள்ளிப் படிப்பை தொலைநிலைக் கல்வி மூலம் கற்றார். 2002-ல் தொழில்முறை வீரராக உருவெடுத்த வாவ்ரிங்கா, 2003-ல் பிரெஞ்சு ஓபன் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். 2005-ம் ஆண்டின் இறுதியில் தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் முன்னேறிய வாவ்ரிங்கா, 2007-ல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் (அமெரிக்க ஓபன்) முதல்முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

2008-ல் முதல்முறையாக தரவரிசையில் டாப்-10-க்குள் நுழைந்த வாவ்ரிங்கா, அதே ஆண்டில் சகநாட்டவரான ரோஜர் ஃபெடரருடன் இணைந்து பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். 2011 சென்னை ஓபனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றபோது தனது டென்னிஸ் வாழ்க்கையில் 3-வது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 2013 அமெரிக்க ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய வாவ்ரிங்காவுக்கு, 2014 வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது.

சென்னை ஓபனில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அந்த சீசனைத் தொடங்கிய வாவ்ரிங்கா, அடுத்த சில நாட்களில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் ஆனார். அதில் காலிறுதியில் ஜோகோவிச்சையும், இறுதிச்சுற்றில் நடாலையும் வீழ்த்தினார்.

2015 சீசனை சென்னை ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று தொடங்கிய வாவ்ரிங்கா, இப்போது பிரெஞ்சு ஓபனில் சாம்பியனாகியிருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளாக சென்னை ஓபனில் இருந்து புதிய சீசனைத் தொடங்கி வரும் வாவ்ரிங்காவுக்கு சென்னையிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை இரு கிராண்ட்ஸ்லாம் உள்பட மொத்தம் 10 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x