Published : 27 Jun 2015 04:22 PM
Last Updated : 27 Jun 2015 04:22 PM

என்னுடனான வாக்குவாதத்திற்குப் பிறகு லாரா தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்தார்: கர்ட்லி ஆம்புரோஸ்

மேற்கிந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ் அதிகம் பேசாதவர், ஆனால் அவர் ‘டைம் டு டாக்’ என்ற சுயசரிதை நூலுக்குப் பிறகே நிறைய பேசத் தொடங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கூரியர் மெயில் ஊடகத்துக்கு அவர் சமீபமாக அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கும் பிரையன் லாராவுக்கும் இடையேயான முரண்பட்ட உறவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்தப் பேட்டியில் பிரையன் லாரா கேப்டன் ஆனது உங்களுக்கு பிடித்தமானதாக இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆம்புரோஸ், “லாரா எவ்வளவு பெரிய பேட்ஸ்மென் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் சில சமயங்களில் அவர் சிக்கல் நிறைந்தவராகிவிடுவார். கிரிக்கெட்டுக்கு அவர் மிக இளம் வயதிலேயே வந்து விட்டார்.

மேலும், சில நாட்களிலேயே சூப்பர் ஸ்டார் தகுதிக்கு உயர்ந்தார். இந்தப் புகழை அவர் சிலவேளைகளில் சரியாகக் கையாள்வதில்லையோ என்று நான் நினைப்பதுண்டு. நானும் அவரும் நன்றாகவே இருந்து வந்தோம். ஆனால், அவர் சில நேரங்களில் எல்லை கடக்கிறார் என்று நினைத்த போது கடிந்து கொண்டேன், யாராக இருந்தாலும் நான் அப்படியே நடத்துவேன், எல்லை மீறினால் அதுதான் நடக்கும். லாராவும் அதற்கு விதிவிலக்கல்ல.

எனவே அவரது நடத்தை, பழக்கவழக்கம் பற்றி நான் மிகத் தெளிவாக புரியும் படியே அவருக்கு விளக்கினேன். என்னுடைய வார்த்தைகளில் எந்த வித நிச்சயமின்மைகளும் இல்லை, அவரும் வார்த்தைக்கு வார்த்தை நான் என்ன கூறுகிறேன் என்பதைப் புரிந்து கொண்டார். ஆனால் இருவரிடையே எந்த வித பகைமையும் இல்லை.

ஒரு முறை எனக்கும அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது, ஆனால் இதனையடுத்து அவர் இங்கிலாந்துக்கு எதிராக 3 சதங்களை அடுத்தடுத்து அடித்தார்” என்றார்.

லாரா தனது ஆஸ்திரேலிய பயணத்தின் போது ஆம்புரோஸின் அறைத் தோழராக இருந்தது பற்றி கூறியது குறித்து ஆம்புரோஸிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த ஆம்புரோஸ், "ஆம் அது உண்மைதான், நானும் பிரையனும் அறைத்தோழர்கள். அப்போதுதான் அவர்மீதான எனது அதிருப்தி வெகுவாக ஏற்பட்டது. நான் அவர் மீது மிகவும் கோபமடைந்தேன். நான் அவரை கொன்று விடுவேன் என்று கூறவில்லை. ஆனால் அறையில் எனது பகுதியில் அவர் ஏதாவது கையை வைத்தால் மேற்கிந்திய அணிக்கு ஒரு பேட்ஸ்மென் குறைவாகிவிடுவார் என்று எச்சரித்தேன். ஆனால் நன்றாகவே பழகினோம்.

அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாக டிரினிடாடில் அறை வீரர்களுக்கு உதவியாளராக இருந்துள்ளார். பிறகு அவர் டெஸ்ட் போட்டிகளில் பெரிய வீர்ராக வந்த பிறகும் கூட நான் அவரைக் கேலி செய்வேன், அதாவது, என் அறையில் என் சட்டைகளை அவர் உலர்த்தி மடித்து வைத்ததாக நான் கேலி செய்வதுண்டு” என்றார்.

கடைசியில் அவரது தாயார் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார் ஆம்புரோஸ். அதாவது ஆம்புரோஸுடன் சேர்த்து 7 குழந்தைகளை அவரது தாயார் வளர்த்து வந்தார். அதாவது உருளைக்கிழங்கு பண்ணைகளில் பணியாற்றியபடியே குழந்தைகளை வளர்த்துள்ளார் ஆம்புரோஸின் தாயார். இது பற்றி ஆம்புரோஸ் கூறியபோது, “என்னுடைய அம்மா மிகவும் திடமான மனநிலை படைத்தவர். எனது சுயசரிதையில் அவரைப்பற்றி கூறியுள்ளேன், பலரும் அறியாத கர்ட்லி ஆம்புரோஸ் எனது சுயசரிதை மூலம் தெரியவருவார். நான் எந்த நிலைமையிலிருந்து வந்தேன் என்பது பலருக்கும் தெரியாதது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x