Published : 23 May 2014 07:50 PM
Last Updated : 23 May 2014 07:50 PM

டெல்லி மீண்டும் மோசமான ஆட்டம்: மும்பைக்கு வெற்றி

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி மேலும் ஒரு தோல்வியச் சந்தித்தது. மும்பை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 140/2 என்ற நிலையிலிருந்து 33 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை மடமடவென இழக்க 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் 158/4 என்று முடிந்து போனது.

மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் இன்று நடைபெறும் இன்னொரு போட்டியை அது ஆவலுடன் எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்றைய இன்னொரு போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வென்றால் மும்பைக்கு ஒரு தொலைதூர வாய்ப்பு இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் வென்று விட்டால் மும்பை வீட்டுக்குச் செல்லவேண்டியதுதான்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலையில் கேதர் ஜாதவும், டுமினியும் ஆடினர் பும்ரா வீசிய அந்த ஓவரில் 9 ரன்களையே அடிக்க முடிந்தது.

டெல்லி துரத்தும்போது 16வது ஓவரில் ஸ்கோர் 116/3 என்று இருந்தது. டுமினி 24 ரன்களுடனும், மனோஜ் திவாரி 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

17வது ஓவரை ஹர்பஜன் வீச திவாரி பவுண்டரி மற்றும் டுமினி சிக்சருடன் 14 ரன்கள் வந்தது. 3 ஓவர்களில் தேவை 44 ரன்கள் என்று இருந்தது.

18வது ஓவரை பும்ரா வீச டுமினி ஸ்லாக் ஸ்வீப்பில் மிட்விக்கெட்டில் சிக்சர் விளாசினார். திவாரி கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட அந்த ஓவரில் 12 ரன்கள் வந்தது. இப்போது 12 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஓரளவுக்கு வாய்ப்பும் இருந்தது.

ஆனால் 19வது ஓவரி வீசிய தென் ஆப்பிரிக்க பவுலர் மெர்ச்சண்ட் டி லாங்கே 3வது பந்தில் திவாரியை வீழ்த்தினார். தூக்கி வானில் அடிக்கப்பட்ட பந்தை ஹஸ்ஸி பிடித்தார். திவாரி 31 பந்துகளில் 41 ரன்களுக்கு அவுட். அந்த ஓவரில் 7 ரன்களே வர கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பும்ரா வீசிய ஓவரில் 9 ரன்களே எடுக்க முடிந்தது. டெல்லிக்கு மீண்டும் ஒரு தோல்வி.

முன்னதாக டெல்லி அணியில் பீட்டர்சன் அதிரடியாகத் துவங்க 6வது ஓவரில் ஸ்கோர் 43 ரன்களை எட்டப்பட்டது. விஜய் 8 ரன்னில் கோபால் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். பிறகு 9வது ஓவரை ஹர்பஜன் வீச பீட்டர்சன் பேட்டை இடது கைக்கு மாற்றிக்கொண்டு விளாச நினைத்து பவுல்டு ஆனார். பீட்டர்சன் 31 பந்துகளில் 44 ரன்களுக்கு வெளியேறினார்.

10வது ஓவரில் தினேஷ் கார்த்திக் படுமோசமான, பொறுப்பற்ற ஷாட்டைத் தேர்வு செய்தார். பந்து வீசியது மெர்சண்ட் டி லாங்கே, இவர் சாதாரணமாக மணிக்கு 140 கிமீ வேகத்தில் வீசுபவர் அவர் பந்தை ஸ்டம்ப்களை காண்பித்துக்கொண்டு பைன் லெக் திசையில் ஸ்கூப் செய்ய முயன்றார் கார்த்திக், மிடில் அண்ட் லெக் ஸ்டம்ப் சாய்ந்தது.

61/3 என்ற நிலையிலிருந்து திவாரி, டுமினி இணைந்து 9ஓவர்களில் 85 ரன்களைச் சேர்த்தாலும் 19வது ஓவரில் 146 ரன்கள் இருந்தபோது திவாரி அவுட் ஆனது டெல்லி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

டாஸ் வென்ற டெல்லி, மும்பையை பேட் செய்ய அழைத்தது. சிம்மன்ஸ், மைக் ஹஸ்சி அதிரடியில் 8 ஓவர்களில் 87 ரன்கள் விளாசப்பட்டது. கவுல், உனட்கட் அடி வாங்கினர். சிம்மன்ஸ் 35 ரன்களிலும், ஹஸ்ஸி 56 ரன்களிலும் வெளியேறினர். ரோகித் சர்மா 30 ரன்னில் அவுட் ஆன பிறகு மும்பை விக்கெட்டுகள் சரிந்து 33 ரன்களுக்கு மீதமுள்ள விக்கெட்டுகள் அனைத்தையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மைக் ஹஸ்சி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். டெல்லி அணி இந்தத் தொடரில் 2 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x