Published : 18 Jun 2015 07:26 PM
Last Updated : 18 Jun 2015 07:26 PM
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அந்த அணி முதலில் பேட் செய்து 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மிர்பூரில் இந்திய அணி வெற்றி பெற 308 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் எடுத்த அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடியாகத் தொடங்கி இடையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடர்ங்கிய போது, 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. அதாவது 123/1 லிருந்து அஸ்வினின் பந்து வீச்சில் அடுத்தடுத்து 3 விக்கெடுகளை இழந்து 146/4 என்று சரிந்தது.
இதில் தமிம் இக்பால் 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 60 ரன்களையும், முன்னதாக சவுமியா சர்க்கார் 56 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 54 ரன்களையும் எடுத்திருந்தனர், தொடக்க விக்கெட்டுக்காக 13.4 ஓவர்களில் 102 ரன்களை இருவரும் அனாயசமாகக் குவித்தனர்.
முதலில் சவுமியா சர்க்கார், ரெய்னாவின் அபாரமான நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். தமிம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோரை அஸ்வின் வீழ்த்தினார்.
பிறகு ஷாகிப் அல் ஹசன், ஷபீர் ரஹ்மான் இணைந்து 14 ஓவர்களில் 83 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஜடேஜா நன்றாக வீசிவந்த வேளையில் சபீர் ரஹ்மான் 41 ரன்களில் பவுல்டு ஆனார். ஸ்லாக் ஸ்வீப் செய்து தோல்வி அடைந்தார் சபீர்.
நசீர் ஹுசைன் இறங்கி 2 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசி 19 ரன்களில் 26 ரன்கள் எடுத்திருந்த போது, 68 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த ஷாகிப் அல் ஹசன், உமேஷ் யாதவ்வின் எங்கு வேண்டுமானாலும் அடிக்க வேண்டிய பந்தை பாயிண்டில் கேட்ச் கொடுத்தார்.
34 ரன்கள் எடுத்த நசீர் ஹுசைன், ஜடேஜாவின் அருமையான கேட்சுக்கு யாதவ்விடம் வீழ்ந்தார். மஷ்ரபே மோர்டசா 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வங்கதேசம் 307 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் தீவிரம் இல்லை, வேகம் இல்லை. அச்சுறுத்தலும் இல்லை. மாறாக ஸ்பின்னர்கள் 28 ஓவர்களில் 139 ரன்களையே விட்டுக் கொடுத்தனர். குறிப்பாக அஸ்வின் 51 ரன்களுக்கு 3 விக்கெட் என்பது இந்தப் பிட்சில் அதிசிக்கனமான வீச்சே. ரெய்னா ஆகச் சிக்கன பவுலர், விக்கெட் எடுக்காவிட்டாலும் 10 ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஜடேஜா 8 ஓவர்களில் 48 ரன்களுக்கு 1 விக்கெட். குமார் 7 ஓவர்கள் 37 ரன்கள் 2 விக்கெட். யாதவ் 8 ஓவர் 58 ரன் 2 விக்கெட். மோஹித் சர்மா மறக்க வேண்டிய போட்டி 4.4 ஓவர்களில் 53 ரன்கள் ஒரு விக்கெட். கோலியும் வீசினார் 2 ஓவர்கள் 12 ரன்கள் விக்கெட் இல்லை.
வங்கதேசம் 25 ரன்கள் குறைவாக எடுத்ததாக ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு நல்ல பேட்டிங் பிட்ச். எனவே இந்தியா 308 ரன்களை எப்படி துரத்துகிறது என்பது ஆர்வமூட்டுவதாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT