சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றில் ஆடுவதற்கான வாய்ப்பை தற்போதைக்கு தக்கவைத்துக் கொண்டது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 45 பந்துகளில் 90 ரன்களை அதிவிரைவாகக் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
துவக்க வீரராக களமிறங்கிய வார்னர் முதல் ஓவரிலிருந்தே தனது பவுண்டரிக் கணக்கை துவக்கினார். மோஹித் சர்மா வீசிய அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் வர, தொடர்ந்து வந்த எந்த பந்துவீச்சாளரையும் சுதாரிக்க விடாமல் வார்னர் மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் பந்தை விரட்டினார். 25 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் அரை சதம் கடந்த வார்னர், ஹாஸ்டிங்ஸ் வீசிய 6-வது ஓவரில் 5 பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்தார்.
மறுமுனையில் ஆடிய தவாண் தனக்கு ஆட வந்த வாய்ப்புகளையும் 1 ரன் எடுத்து வார்னருக்கு கொடுக்க, அவர் வெற்றி இலக்கை சீக்கிரம் எட்டும் முனைப்பில் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். 45 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தபோது (12 பவுண்டரி, 3 சிக்ஸர்) ஹாஸ்டிங்ஸ் வீசிய பந்து மட்டையில் பட்டு ஸ்டம்பை தாக்க வார்னர் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
ஒரு ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் தேவைப்பட்ட நிலையில் வார்னர் விட்டதை தவாண் தொடர்ந்தார். 40 பந்துகளில் அரை சதத்தை எட்டிய தவாண் அணியை பாதுகாப்பாக வெற்றிப் பாதைக்கு வழிநடத்திச் சென்றார். ஓஜா (19 ரன்கள்), ஃபின்ச் (7 ரன்கள்), சாமி (0) ஆகியோர் தேவையின்றி ஆட்டமிழந்தாலும், கடைசி ஓவரில் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கைக் கடந்தது.
முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றில் ஆடுவதற்கான வாய்ப்பை ஹைதராபாத் தற்போதைக்கு தக்கவைத்துக் கொண்டுள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மித் மற்றும் ப்ளெஸ்ஸிஸ் இருவரும் ஹைதராபாதுக்கு பவுண்டரிகளில் பதிலளித்தனர். 3 ஓவர்களில் 32 ரன்கள் அதிவேகமாக சேர 4-வது ஓவரில் ப்ளெஸ்ஸிஸ் 19 ரன்களுக்கு துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார்.
ரசூல் வீசிய 6-வது ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசிய ஸ்மித், கரன் சர்மா வீசிய அடுத்த ஓவரிலும் ஒரு சிக்ஸ அடித்து அரை சதத்தை நெருங்கினார். அந்த ஓவரின் 5-வது பந்தை சரியாக கணிக்காமல் ஆடியதால் லெக் பிஃபோர் முறையில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரை சதத்தை ஸ்மித் தவற விட்டார்.
அடுத்து ஹஸ்ஸி களமிறங்க, மறுமுனையில் ஆடிய ரெய்னா 4 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மேற்கொண்டு விக்கெட் இழப்பின்றி சென்னை அணி, ஹஸ்ஸி மற்றும் தோனியின் துணையுடன் சிறப்பாக ஆடியது. கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த தோனி - டேவிட் ஹஸ்ஸி ஜோடி, அணியை சிறப்பான ஸ்கோரை நோக்கி வழிநடத்தியது. 77 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் களத்தில் இணைந்த இருவரும் ஹைதராபாதின் பந்துவீச்சை பொறுமையாக கணித்து ஆடினர். 68 பந்துகளில் 108 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர்.
தோனி 39 பந்துகளிலும், ஹஸ்ஸி 33 பந்துகளிலும் அரை சதத்தைக் கடந்தனர். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் வீசிய 20-வது ஓவரில், சென்னையின் கேப்டன் தோனி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களோடு 24 ரன்களைக் எடுத்தார். கடைசி 5 ஒவர்களில் மட்டும் 68 ரன்களை இந்த இணை அதிரடியாக சேர்த்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்களை சென்னை அணி குவித்தது.
WRITE A COMMENT