Published : 08 May 2014 09:50 PM
Last Updated : 08 May 2014 09:50 PM

ஹைதராபாத் பந்துவீச்சில் நிலைகுலைந்தது ராஜஸ்தான்: 32 ரன்களில் தோல்வி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. ஹைதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.



135 ரன்களை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு, இதுவரை சிறப்பாக ஆடிவந்த துவக்க வீரர் ரஹானே, நாயருடன் களமிறங்கினார். முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ரஹானே வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

சாம்சன் மட்டும் சிறிது சமாளித்து ஆட முயற்சி செய்ய, நாயர் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து, சாம்சன் 16 ரன்களுக்கும், வாட்சன் 11 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணியின் விரட்டல் தடைபட்டது. தொடர்ந்த ஸ்மித், பின்னி ஜோடி, ஹைதராபாத் பந்துவீச்சை கவனித்து ஆட முயற்சித்தாலும், ரன்கள் வருவது கடினமாக இருந்தது. 14-வது ஓவரில் பின்னியும், 16-வது ஓவரில் ஸ்மித்தும் ஆட்டமிழக்க, ஆட்டம் ஹைதராபாதின் கைக்குள் வந்தது.

முடிவில் ராஜஸ்தான் அணி, 19.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்களை மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இது ஹைதராபாத் அணியின் மூன்றாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த ராஜஸ்தான் அணிக்கு, துவக்க வீரர் ஷிகர் தவாணின் அதிரடி ஆட்டம் சவாலாக அமைந்தது. 20 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 33 ரன்களை வேகமாக அவர் குவித்தார். ஆனால், வாட்சன் வீசிய 4-வது ஓவரின் கடைசி பந்தில் தவாண் வீழ்ந்தார்.

தொடர்ந்து வந்த ஹைதராபாத் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற அணியின் ஸ்கோர் தத்தளித்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 134 ரன்களை மட்டுமே சேர்த்தது.

வாட்சன் ஹாட்ரிக்

4-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் எடுத்த வாடசன், அடுத்து 17-வது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஹென்ரிக்கஸ் மற்றும் சர்மா ஆகியோரை அவர் வெளியேற்றினார். இதன் மூலம் இந்தத் தொடரின் இரண்டாவது ஹாட்ரிக்கை வாட்சன் பதிவு செய்தார். ராஜஸ்தானின் முந்தைய போட்டியில் அந்த அணியின் வீரர் டாம்பே ஹாட்ரிக் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x