Published : 28 May 2014 05:34 PM
Last Updated : 28 May 2014 05:34 PM

மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார்

மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் சுல்தான் அஸ்லான் ஷா இன்று காலமானார். அவருக்கு வயது 86.

கடந்த 41 ஆண்டுகளாக இவர் மலேசிய ஹாக்கி விளையாட்டின் தூணாகத் திகழ்ந்துள்ளார். ஒரு விரராகவும், நிர்வாகியாகவும் இவரது பங்களிப்பு மகத்தானது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய மருத்துவமனையில் இன்று மதியம் 1.30 மணியளவில் இவரது உயிர் பிரிந்தது.

நாளை கோலாகங்சாகரில் உள்ள மாளிகையில் இறுதி மரியாதைக்காக இவரது உடல் வைக்கப்படவுள்ளது.

சுல்தான் அஸ்லான் ஷா விளையாட்டுத் துறையில் அதீத ஆர்வம் காட்டியவர், குறிப்பாக ஹாக்கி மீது இவருக்கு ஒரு சிறப்பு நேயமே இருந்து வந்தது. இதனால் 1983ஆம் ஆண்டு சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை என்ற ஒன்றை நிறுவினார். இது உலகின் தலை சிறந்த, மதிப்பு மிக்க ஹாக்கி தொடராக திகழ்ந்து வருகிறது.

முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வந்த இந்தத் தொடர் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாக 1998ஆம் ஆண்டு பிரபலம் அடைந்தது.

1973ஆம் ஆண்டு சுல்தான் அஸ்லான் ஷா மலேசிய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலத்தில் மலேசியா 1975 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் இரண்டு உலக கோப்பை போட்டிகளை நடத்தியுள்ளது.

இவரது நிர்வாகத் திறமை இவருக்கு 1997 ஆம் ஆண்டு ஆசிய ஹாக்கி கூட்டமைப்புத் தலைவர் பதவியைப் பெற்றுத்தந்தது. இன்று வரை அந்தப் பதவி நீடித்தது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் துணைத்தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x