Published : 06 May 2015 02:45 PM
Last Updated : 06 May 2015 02:45 PM
மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று 57 ரன்களை விளாசிய யுவராஜ் சிங், தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு இனி ரன்களைக் குவிப்பதன் மூலமே பதிலளிப்பேன் என்று கூறியுள்ளார்.
நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி 78/4 என்று தடுமாறிக் கொண்டிருந்த போது யுவராஜ் சிங் அற்புதமான இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார். 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 57 ரன்களை எடுத்தார் யுவராஜ் சிங். இதனால் டெல்லி 152 ரன்களை எட்டியது.
தொடர்ந்து ஆடிய மும்பை இண்டியன்ஸ் அணி ஹர்பஜன் சிங் ஆட்டமிழந்த போது 5.2 ஓவர்களில் 40/4 என்று தடுமாறியது. அப்போது ரோஹித் சர்மா (46) ராயுடு ஜோடி சேர்ந்து 10 ஓவர்களில் 60 ரன்களை மேலும் சேர்த்து 15.2 ஓவர்களில் ஸ்கோரை 100 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது ரொஹித் சர்மா மிஸ்ரா பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார்.
ஆனால் அதன் பிறகு அம்பாத்தி ராயுடு (49), கெய்ரன் பொலார்ட் (26, 3 சிக்சர்கள்) அதிரடியில் 3 பந்துகள் மீதமிருக்க 153/5 என்று வெற்றி பெற்றது மும்பை இண்டியன்ஸ்.
இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் அடித்த 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அவரது பழைய ஆட்டத்தை நினைவூட்டுமாறு அமைந்தது.
அவர் தனது அரைசதம் பற்றி கூறும் போது, “என் பணி கிரிக்கெட் ஆடுவதே, விமர்சகர்களின் பணி எழுதுவது. நான் தொலைக்காட்சியில் வருவதையோ, செய்தித்தாள்களில் எழுதப்படுவதையோ கண்டு கொள்வதில்லை. என் வாழ்வில் இப்போதைக்கு அதற்கு நேரமில்லை. எனவே நான் எனது பணியில் தீவிரமாக இருக்கிறேன்.
பந்துகள் எனது மட்டையில் நன்றாக சிக்கின. ஆனாலும் நான் 20 பிளஸ் ஸ்கோர்களையே எடுத்து வந்தேன். ஐபிஎல் போன்ற கிரிக்கெட் ஆட்டங்களில் சீரான தன்மையை மதிப்பிட முடியாது, நமது ஆட்டம் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே முக்கியம், எனது பணி விளையாடி வெற்றி பெறச் செய்வதே.
இப்போது செய் 'அல்லது செத்துமடி' என்ற சூழ்நிலை எங்கள் அணிக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன, இதில் அனைத்திலும் வென்றாகவேண்டும். இது கடினம் என்றாலும் சாத்தியமாகாதது அல்ல. கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி தொடர்ச்சியாக 6 அல்லது 7 போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று பிறகு சாம்பியன் பட்டத்தையே வென்றது நினவுக்கு வருகிறது” என்றார் யுவராஜ் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT