Last Updated : 28 May, 2015 06:51 PM

 

Published : 28 May 2015 06:51 PM
Last Updated : 28 May 2015 06:51 PM

தோனியின் மனதில் உள்ளதை அறிய முடியாது: கோலிக்கு கபில் அறிவுரை

வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் தலைமையேற்று வழி நடத்தும் விராட் கோலி, தோனியிடமிருந்து கேப்டன்சி பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

மைதானத்தில் உணர்ச்சிகளை வெளிப்படையாக காண்பிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் கோலி இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும் என்கிறார் கபில் தேவ்.

"கோலி கிரிக்கெட் மைதானத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகிறார், அவரது உணர்ச்சிகள் வெளிப்படையாகத் திரையில் தெரிகிறது. மாறாக தோனியின் மனதில் என்ன உள்ளது என்பது ஒருவருக்கும் தெரியாது. உணர்ச்சிகளை வெளிப்படையாக தோனி காண்பிக்க மாட்டார். முதிர்ச்சி என்பது கிரிக்கெட்டில் மிக மிக முக்கியமான விஷயம்.

தோனி நிறைய தவறுகள் செய்துள்ளார், ஆனால் காலம் செல்லச் செல்ல தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வந்துள்ளார். நான் எல்லாரையும் விட நிறைய தவறுகள் செய்துள்ளேன். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் ஆட்டத்தில் விரைவில் தவறுகளைக் கண்டுபிடித்து சரி செய்து அணியை ஆட்டத்துக்குள் மீண்டும் செலுத்துவது மிக முக்கியம்.

அணியின் ஆட்டத்தை விட நமது சொந்த ஆட்டம் அவ்வளவு முக்கியமானது அல்ல. ஒரு கேப்டனாக வீரர்களிடமிருந்து சிறப்பான திறமையை எப்படி வெளிக்கொணர்வது என்பது மிக முக்கியம்” என்றார்.

கேப்டன்சி பாணி பற்றி கூறும் போது, “ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமானவர்களே. ஒவ்வொரு தனிநபருக்கும் வெவ்வேறு சிந்தனை முறைகள் இருக்கும். அனைவரும் ராகுல் திராவிட் அல்லது ஹர்பஜன் சிங் அல்லது தோனி போல் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

அணியில் கேப்டன் ஒரு முக்கியமான அங்கம். வீரர்களும் முக்கிய அங்கம்தான். ஒரு வீரர் தனது திறமையை கேப்டன் அறியும்படிச் செய்ய வேண்டும். சில வேளைகளில் கேப்டன் வீரர்களின் திறமையை கண்டுபிடித்து வெளிக்கொணர்தல் வேண்டும் எனவே இந்த இரண்டின் கலவைதான் நல்ல அணியை உருவாக்குகிறது” என்றார் கபில் தேவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x