Published : 26 May 2015 08:19 PM
Last Updated : 26 May 2015 08:19 PM
நடந்து முடிந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
நியூஸிலாந்து தொடக்க வீரர்களான மார்டின் கப்தில் மற்றும் லாதம் ஆகியோர் ரன் எடுக்காமல் முறையே ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரிடம் ஆட்டமிழந்தனர்.
நியூஸிலாந்து அணியில் 6 முறை இரண்டு தொடக்க வீரர்களும் ரன் எடுக்காமல் அவுட் ஆகியுள்ளனர். அது பற்றிய சுவையான புள்ளி விவரம் வருமாறு:
லார்ட்ஸில் இவ்வாறு 3 முறை நடந்துள்ளது. இதில் நியூஸிலாந்து அணி 2 முறை இத்தகைய துரதிர்ஷ்டத்தை சந்தித்துள்ளது. முதல் முறை 1986ஆம் ஆண்டு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து தொடக்க வீரர்களான ஜான் ரைட், புரூஸ் எட்கர் ஆகியோர் 2-வது இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி வெளியேறினர். ஆனால் அந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
முன்னதாக லார்ட்ஸ் மைதானத்தில் 1955-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து மோதிய 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் மெக்ளூ, கொடார்ட் ஆகிய 2 தொடக்க வீர்ர்களும் டக் அவுட் ஆகியுள்ளனர். இதில் மெக்ளூ 2-வது இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நியூஸிலாந்து அணி 2006-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் ஆடும் போது அதன் தொடக்க வீரர்கள் பாப்ஸ், ஜேமி ஹவ் ஆகிய இருவரும் ரன் எடுக்காமல் வெளியேறினர்.
1992-ம் ஆண்டு இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆக்லாந்தில் ஹார்ட்லேண்ட், ஜான் ரைட் ஜோடி டக் அவுட் ஆகியுள்ளனர். 1965/66 தொடரிலும் அதற்கும் முன்னதாக 1961/62 தொடரிலும் நியூஸி தொடக்க வீரர்கள் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளனர். மொத்தத்தில் நியூஸிலாந்துக்கு 6 முறை இது நடந்ததில் 4 முறை இங்கிலாந்துக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 19-ம் நூற்றாண்டின் இறுதிக் காலம் முதல் 2015 வரை 40க்கும் மேற்பட்ட தடவை தொடக்க வீர்ர்கள் இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளனர்.
அதில் ஒரு சில:
1977: இந்தியாவின் சிறந்த தொடக்க வீரர்களான சுனில் கவாஸ்கர், சேத்தன் சவுகான் 1977-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆனார்கள்.
1979:இங்கிலாந்தின் டெரிக் ராண்டல் மற்றும் ஜெஃப் பாய்காட் தொடக்க ஜோடி பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டக் அவுட் ஆகி வெளியேறினார்கள்.
1980: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் ஷபிக் அகமட், சாதிக் மொகமட்
1981: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் மீண்டும் பாகிஸ்தான் தொடக்க வீர்ர்கள் முடாசர் நாசர், ரிஸ்வான் உஸ் சமான் டக் அவுட்.
1982: இங்கிலாந்துக்கு எதிராக ஹெடிங்லேயில் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் மோசின் கான், முடாசர் நாசர் ரன் எடுக்காமல் வெளியேறினர்.
1983: மேற்கிந்திய தொடக்க வீரர்கள் கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் இந்தியாவுக்கு எதிராக குவீன்ஸ்பார்க் ஓவலில் டக் அவுட் ஆகி வெளியேறினர். இந்தப் போட்டி பற்றி சுவையான சம்பவம் ஒன்று கூறப்படுவதுண்டு, இந்திய தொடக்க வீர்ர் சுனில் கவாஸ்கர் இந்த டெஸ்ட்டில் 1 ரன் எடுத்து அவுட் ஆனார். இவர் எடுப்பதற்குக் குறைவாகவே மேற்கிந்திய தொடக்க வீரர்கள் ரன் எடுப்பார்கள் என்று ரசிகர் ஒருவர் நண்பரிடம் பந்தயம் கட்டினாராம். கவாஸ்கர் 1 ரன்னில் அவுட் ஆனவுடன் அவர் பந்தயத்தில் தோற்றதாக ஒப்புக் கொண்டு பந்தயத் தொகையை அளித்துள்ளார். ஆனால், பல்வீந்தர் சிங் சாந்து, கிரீனிட்ஜ், ஹெய்ன்ஸ் இருவரையும் டக் அவுட் ஆக்க பந்தயத்தில் ஜெயித்தார் என்று கூறப்படுவதுண்டு.
1983: இலங்கை தொடக்க வீரர்கள் சித்தார்த் விட்டுமனி, பெர்னாண்டோ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டக் அவுட் ஆகியுள்ளனர்.
1986: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சபைனா பார்க்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் கிரகாம் கூச், டிம் ராபின்சன் டக் அவுட் ஆகியுள்ளனர்.
1998: இந்திய தொடக்க வீரர்களான நவ்ஜோத் சித்து, நயன் மோங்கியா ஜிம்பாப்வேயிற்கு எதிராக ஹராரேயில் டக் அவுட்.
1999: இந்திய தொடக்க வீரர்களான சடகோபன் ரமேஷ், தேவங் காந்தி நியூஸிலாந்துக்கு எதிராக பஞ்சாபில் நடைபெற்ற போட்டியில் டக் அவுட்.
2000: அட்டப்பட்டு-ஜெயசூரியா தொடக்க ஜோடி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ரன் எடுக்காமல் வெளியேறினர்.
சரி. ஆஸ்திரேலியா தொடக்க வீரர்கள் பட்டியலில் இல்லையே என்று வருந்த வேண்டாம். 1950க்கு பிறகு சுமார் 49 ஆண்டுகள் கழித்து 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் ஸ்லேட்டர், கிரெக் ப்ளூவெட் இலங்கையில் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் அங்கீகாரம் பெற்ற பிறகு 2000-ம் ஆண்டில் கேரி கர்ஸ்டன், நீல் மெக்கன்சி ஜோடி இலங்கைக்கு எதிராக டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளனர். இதுவும் அந்த அணிக்கு 1955ம் ஆண்டு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு நடந்தது.
மீண்டும் 2006-இல் இதே இலங்கை அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர்களான கிப்ஸ்,ஹால் டக் அவுட் ஆகியுள்ளனர்.
வங்கதேச தொடக்க வீரர்களான தமிம் இக்பால், இம்ருல் கயேஸ் 2010-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டக் அவுட் ஆகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT