Published : 17 May 2015 01:26 PM
Last Updated : 17 May 2015 01:26 PM
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலை வீழ்த்தினார் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா.
இத்தாலியில் நடைபெறும் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நடால் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் களிமண் தரையில் நடைபெறும் போட்டியில் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்த நடாலை, களிமண் தரையில் நடைபெற்ற போட்டியில் முதல்முறையாக வாவ்ரிங்கா வென்றுள்ளார்.
சமீபகாலமாக நடாலின் ஆட்டத்தில் வேகம் குறைந்து விட்டது. கடந்த வாரம் மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆன்டி முர்ரேவிடம் தோல்வியடைந்தார். இப்போது மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளார்.
நடாலுக்கு எதிரான போட்டியில் 7-6 (9/7), 6-2 என்ற செட் கணக்கில் வென்ற வாங்ரிங்கா அடுத்ததாக அரையிறுதி ஆட்டத்தில் சக நாட்டு வீரர் ரோஜர் பெடரரை எதிர்கொள்கிறார். இந்த போட்டி அவருக்கு சவால் மிகுந்ததாக அமையும்.
தோல்வி குறித்து கருத்துத் தெரிவித்த நடால், நான் விளையாடிய விதம் நானே விரும்பும்படி இல்லை. வாவ்ரிங்கா போன்ற ஒரு சிறந்த வீரருக்கு எதிராக இரவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பது சவாலான விஷயம். அனைத்து பந்துகளையுமே அவர் மிகவும் வலுவாக திருப்பி அனுப்பினார். தரையில் இன்று பவுன்ஸ் அதிகமாக இருந்தது. எனவே என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை என்று கூறினார்.
முதல் நிலை வீரரான செர்பியா வின் நோவாக் ஜோகோவிச், பெடரர் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஜோகோவிச் தனது அரையிறுதியில் டேவிட் பெரரை எதிர்கொள்கிறார்.
இறுதியில் சானியா ஜோடி
மகளிர் இரட்டையர் இறுதி ஆட்டத்திற்கு இந்தியாவின் சானியா மிர்ஷா - ஸ்விட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி தகுதி பெற் றுள்ளது. நேற்று நடைபெற்ற அரை யிறுதி ஆட்டத்தில் ஸ்லோவேகி யாவின் காத்ரீனா, பிரான்ஸின் கரோலின் ஜோடியை, 6- 2, 7-6(5) என்ற நேர் செட் கணக்கில் வென்று சானியா ஜோடி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
அரையிறுதியில் ஷரபோவா
மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி ஆட்டத்தில் பெலாரஸை சேர்ந்த வீராங்கனை விக்டோரியா அசரென்காவை அவர் எதிர் கொண்டார். இதில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஷரபோவா வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். -
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT