Published : 28 May 2015 09:31 AM
Last Updated : 28 May 2015 09:31 AM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அதேநேரத்தில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த ருமேனியாவின் சைமோனா ஹேலப் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டிருக்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-2, 7-6 (1), 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸை வீழ்த்தினார். 2009 சாம்பியனான ஃபெடரர் அடுத்ததாக போஸ்னியாவின் டாமிர் தும்ஹுரை சந்திக்கிறார்.
போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 6-3, 6-4, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் செர்பியாவின் துசான் லவோவிச்சை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை சந்திக்கிறார் வாவ்ரிங்கா.
போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் நிஷிகோரி 7-5, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பிரேசிலின் தாமஸ் பெலூச்சியை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் ஜெர்மனியின் பெஞ்சமின் பெக்கரை சந்திக்கிறார் நிஷிகோரி.
மரியா-சமந்தா மோதல்
2012 பிரெஞ்சு ஓபன் சாம்பியனான மரியா ஷரபோவா தனது 2-வது சுற்றில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான டயட்சென்கோவை வீழ்த்தினார். ஷரபோவா தனது 3-வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை சந்திக்கவுள்ளார். சமந்தா தனது 2-வது சுற்றில் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் பிரான்ஸைச் சேர்ந்த வைல்ட்கார்ட் வீராங்கனையான அமான்டின் ஹெஸியை வீழ்த்தினார்.
ஹேலப் அதிர்ச்சி தோல்வி
போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த ருமேனியாவின் சைமோனா ஹேலப் தனது 2-வது சுற்றில் 5-7, 1-6 என்ற நேர் செட்களில் குரேஷியாவைச் சேர்ந்த மூத்த வீராங்கனையான லியூசிச் பரோனியிடம் அதிர்ச்சி தோல்விகண்டார். 2001-க்குப் பிறகு பிரெஞ்சு ஓபனில் 3-வது சுற்றுக்கு முன்னேறியிருக்கும் லியூசிச், கடந்த அமெரிக்க ஓபனிலும் ஹேலப்பை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT