Last Updated : 29 May, 2015 09:37 AM

 

Published : 29 May 2015 09:37 AM
Last Updated : 29 May 2015 09:37 AM

பிரெஞ்சு ஓபன் 3-வது சுற்றில் நடால், செரீனா: வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடால், உலகின் முதல் நிலை வீராங்கனை யான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறி யுள்ளனர்.

அதேநேரத்தில் முன்னணி வீராங்கனைகளான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான நடால் 6-4, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான நிகோலஸ் அல்மாக்ரோவை எளிதாக வீழ்த்தினார்.

வெற்றி குறித்துப் பேசிய நடால், “இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. இன்று மிகச்சிறப்பான, உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக் கிறேன்” என்றார். இதுவரை அல்மாக்ரோவுடன் 14 முறை மோதியுள்ள நடால், அதில் 13-ல் வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் நடால், அடுத்ததாக ஆஸ்திரேலியாவின் ஜுர்கன் மெல்ஸர் அல்லது ரஷ்யா வின் ஆண்ட்ரே குஸ்நெட்சோவை சந்திக்கவுள்ளார்.

நிஷிகோரி முன்னேற்றம்

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் நிஷிகோரியை எதிர்த்து 3-வது சுற்றில் விளையாடவிருந்த ஜெர்மனியின் பெஞ்சமின் பெக்கர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து 3-வது சுற்றில் விளையாடாமலேயே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் நிஷிகோரி.

மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோன் கடும் போராட்டத்துக்குப் பிறகு 6-7 (11), 7-5, 10-8 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 3 மணி நேரம், 50 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த ஆட்டம், பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டிகளின் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்தது.

இதற்கு முன்னர் 2011-ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஷியாவோன்-குஸ்நெட்சோவா மோதிய ஆட்டம் 4 மணி நேரம், 44 நிமிடங்கள் நடைபெற்றது. அந்த ஆட்டம்தான் மகளிர் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக நேரம் நடைபெற்ற ஆட்டம். அதிலும் ஷியாவோன்தான் வெற்றி பெற்றார்.

மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் போட்டித் தரவரிசை யில் 4-வது இடத்தில் இருக்கும் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா 6-7 (4), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் சில்வியாவை போராடி வென்றார்.

வோஸ்னியாக்கி தோல்வி

மற்றொரு 2-வது சுற்று ஆட்டத் தில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 4-6, 6-7 (4) என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

போட்டித் தரவரிசையில் முதல் 6 இடங்களில் இருந்தவர்களில் வோஸ்னியாக்கியோடு சேர்த்து 3 பேர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். முன்னதாக 3-வது இடத்தில் இருந்த ருமேனியாவின் சைமோனா ஹேலப் 2-வது சுற்றோடும், 6-வது இடத்தில் இருந்த கனடாவின் யூஜீனி புச்சார்டு முதல் சுற்றோடும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது 2-வது சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பிறகு 5-7, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அன்ன லீனா ஃபிரைட்சாமை தோற்கடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x