Published : 13 Apr 2015 10:00 AM
Last Updated : 13 Apr 2015 10:00 AM
ஐபில் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸுக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணியின் ஹூடா 25 பந்துகளில் 54 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மி்த் டெல்லியை பேட் செய்ய அழைத்தார்.
மயங்க் அகர்வாலும், ஸ்ரேயாஸ் அய்யரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். ஸ்ரேயாஸ் தொடக்கத்தில் நிதானமாக ஆட, மயங்க் வெளுத்து வாங்கினார். குறிப்பாக குல்கர்னி வீசிய 4-வது ஓவரில் ஹாட்ரிக் உட்பட 4 பவுண்டரிகளை விளாசினார்.
மயங்க்கின் அதிரடிக்கு டாம்பே முற்றுப்புள்ளி வைத்தார். 21 பந்துகளில் ஒரு சிக்ஸர் 6 பவுண்டரிகள் உட்ப 37 ரன்கள் எடுத்த மயங்க், டாம்பே பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் கேப்டன் டுமினி ஸ்ரேயாஸுடன் ஜோடி சேர்ந்தார். டுமினி மிக நிதானமாக விளையாட ஸ்கோரின் வேகம் குறைந்தது. அப்போது வேகம் காட்டிய ஸ்ரேயாஸ் 30 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடினார். அவர் 17 பந்துகளில் 2 சிக்ஸர் உட்பட 27 ரன்கள் குவித்து ஆட்ட மிழந்தார். கடைசி கட்டத்தில் களமிறங்கிய மேத்யூஸ் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்தார். அவர் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டுமினி கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார். அவர் 38 பந்துகளில் 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் மோரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
185 ரன்கள் இலக்கு
185 ரன்கள் இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 11 ரன்களிலும், அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடி காட்டிய கே.கே. நாயர் மிஸ்ரா சுழலில் வீழ்ந்தார். அவர் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். ஸ்டூவர்ட் பின்னியை ஒரு ரன்னில் வெளியேற்றினார் இம்ரான் தாஹிர்.
அவ்வப்போது பவுண்டரி களையும், சிக்ஸர்களையும் ரஹானே விரட்ட, அவருடன் இணைந்த ஹூடா அதிரடி காட்டினார். 39 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஹானே ஆட்டமிழந்தார். அப்போது வெற்றிக்கு 29 பந்துகளில் 55 ரன்கள் தேவைப்பட்டன.
ஆனால், ஹூடா அநாசயமாக சிக்ஸர்களையும் பவுண்டரி களையும் விரட்டி 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். 25 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 54 ரன்களில் ஹூடா ஆட்டமிழந்தார். அவரை இம்ரான் தாஹிர் வெளியேற்றினார். அதே ஓவரில் பாக்னரையும் வெளியேற்ற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மோரிஸும், சவுத்தியும் களத்திலிருந்தனர். கடைசி ஓவரை மேத்யூஸ் வீசினார்.
முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுக்கப்பட்டன. அடுத்த மூன்று பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4-வது பந்தை மோரிஸ் பவுண்டரிக்கு விரட்டினார். 5-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 3 ரன்கள் என்ற பரபரப்பான நிலையில், கவர் திசையில் பவுண்டரி அடித்த சவுத்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார்.
சவுத்தி 7, மோரிஸ் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருது ஹூடா வுக்கு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT