Published : 17 Apr 2015 03:34 PM
Last Updated : 17 Apr 2015 03:34 PM
விசாகப்பட்டிணத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 127 ரன்கள் என்ற குறைந்த இலக்கைத் துரத்த ராஜஸ்தான் அணியை வியர்வை சிந்த வைத்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்.
முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் குல்கர்னி, தாம்பே ஆகியோரின் அபார பந்து வீச்சினால் 127/5 என்று மடிந்தது. இதனை வெற்றி பெற கடைசி பந்து வரை ஆட்டத்தை இழுத்தது சன் ரைசர்ஸ். கடைசி பந்தை ஜேம்ஸ் பாக்னர் பவுண்டரி அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிப்பாதையை தொடர்ந்தது.
128 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ், ரஹானே, சஞ்சு சாம்சன் மூலம் 64 ரன்கள் என்ற ஒரு நல்ல தொடக்கம் கண்டது. ஆனால் சஞ்சு சாம்சன் 26 ரன்களில் பொபாரா பந்தில் விக்கெட் கீப்பர் நமன் ஓஜாவின் அருமையான கேட்சிற்கு வெளியேறினார்.
லெக் ஸ்பின்னர் கரன் சர்மா, பார்மில் உள்ள கேப்டன் ஸ்மித்தை 13 ரன்களில் வீழ்த்தினார்.
கடைசி ஓவரை பிரவீண் குமார் வீச வெற்றி பெறத் தேவையான 5 ரன்களை எடுப்பதற்குள் சுவாரசியங்கள் நிகழ்ந்தது. பிரவீண் குமார் அபாரமாக வீசி 5 பந்துகளில் 4 ரன்களையே விட்டுக் கொடுத்தார். ஆனால் கடைசி பந்தை பாக்னர் பவுண்டரிக்கு விரட்டி 4-வது வெற்றியைப் பெறச் செய்தார்.
18 ஓவர்கள் வரை ராஜஸ்தான் நன்றாகவே ஆடியது. ஆனால் 12 பந்துகளில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில் பதற்றம் வரத் தொடங்கியது.
62 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடிய அஜிங்கிய ரஹனே, டிரெண்ட் போல்ட் பந்தை விளாச முயன்று பவுல்டு ஆனார். ராயல்ஸ் அணிக்கு 9 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்றானது. பிரவீண் குமார் கடைசி ஓவரில் 2 அருமையான யார்க்கர்களை வீசினார். ஒரு லெக் பை வந்தது. 2 பந்துகளில் 2 ரன்கள் என்ற நிலையில் ஸ்டூவர்ட் பின்னி, பந்தை லாங் ஆஃப் திசையில் டிரைவ் செய்து ஒரு ரன் எடுக்க ஸ்கோர்கள் சமமானது.
கீப்பர், பீல்டர்கள் வட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். சிங்கிளைத் தடுக்க களவியூகம் மாற்றப்பட்டது. ஆனால் பிரவீன் குமாரின் யார்க்கர் முயற்சி தாழ்வான புல்டாஸாக அமைய ஜேம்ஸ் பாக்னர் அதனை கவர் பாயிண்ட் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார். 131/4 என்று ராஜஸ்தான் வெற்றியை ருசித்தது. சன் ரைசர்ஸ் தரப்பில் பொபாரா அருமையாக வீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரவீன், புவனேஷ் ஆகியோரும் சிக்கனமாகவே வீசினர், ஆனால் விக்கெட்டுகளைக் கைப்பற்றவில்லை.
முன்னதாக சன் ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்ய அழைக்கப்பட வார்னர் 21 ரன்களில் ரன் அவுட் ஆனார். அது முதல் அந்த அணிக்கு சரிவு ஏற்பட்டது. ஷிகர் தவன் (10) கே.எல். ராகுல் ஆகியோரை தவல் குல்கர்னி அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹேட்ரிக் வாய்ப்பைப் பெற்றார்.
நமன் ஓஜா, மோர்கன் இணைந்து 9 ஓவர்களில் 52 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஓஜா 25 ரன்களில் தாம்பேயின் அற்புதமான பந்துக்கு பவுல்டு ஆனார். மோர்கன் 27 ரன்களில் தாம்பேயிடம் வீழ்ந்தார். பொபாரா 23 ரன்களையும், ஆஷிஷ் ரெட்டி 13 ரன்களையும் அடிக்க சன் ரைசர்ஸ் 127 ரன்களை எட்டியது. குல்கர்னி 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், லெக் ஸ்பின்னர் தாம்பே 4 ஓவர்களில் 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக அஜிங்கிய ரஹானே தேர்வு செய்யப்பட்டார். மொத்தத்தில் 128 ரன்கள் இலக்கை எடுக்க ராஜஸ்தானை வியர்வை சிந்த வைத்தது சன் ரைசர்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT