Published : 28 May 2014 10:00 AM
Last Updated : 28 May 2014 10:00 AM

ஐபிஎல்: வெளியேறுவது யார்? சென்னை-மும்பை இன்று மோதல்

மும்பையில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் எலிமினேட்டர் சுற்று என்றழைக்கப்படும் வெளியேற்றும் சுற்றில் இருமுறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும், நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸும் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணியே 2-வது தகுதிச்சுற்றுக்கு தகுதிபெறும். தோற்கும் அணி போட்டியிலிருந்து வெளியேறும். வாழ்வா, சாவா ஆட்டம் என்பதால் இரு அணிகளும் இந்தப் போட்டியில் வெற்றி பெற கடுமையாகப் போராடும்.

நடப்பு சாம்பியனான மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 14.4 ஓவர்களில் 190 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அந்த வெற்றியால் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றிருக்கும் மும்பை இண்டியன்ஸ் அணி, அதேபோன்று இந்த ஆட்டத்திலும் விளையாட முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிரட்டும் ஆண்டர்சன்

சிம்மன்ஸ், மைக் ஹசி, ரோஹித் சர்மா, கோரே ஆண்டர்சன், அம்பட்டி ராயுடு, கிரண் போலார்ட் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 44 பந்துகளில் 95 ரன்கள் குவித்து மும்பை அணியை அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய ஆண்டர்சன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேற்கண்ட வீரர்களில் ஒருவர் களத்தில் நின்றுவிட்டாலும் போட்டியின் முடிவை மாற்றிவிடுவார்கள்.

பலவீனமான பந்துவீச்சு

மும்பையின் பேட்டிங் பலமாக இருந்தாலும், பந்துவீச்சைப் பொறுத்தவரையில் லசித் மலிங்கா இல்லாததால் சற்று பலவீனமாகவே உள்ளது. மலிங்கா இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணிக்கு திரும்பிவிட்டார். ஜாகீர்கானுக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட பிரவீண் குமாரின் பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடவில்லை. எனவே அவர் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறுவாரா என்பது தெரியவில்லை. சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் சிங், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் மும்பைக்கு பலம் சேர்க்கின்றனர்.

கலக்கும் ஸ்மித்

2009 நீங்கலாக அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஐபிஎல் சீசனில் மும்பைக்கு எதிரான இரு லீக் ஆட்டங்களிலுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டுவைன் ஸ்மித் அந்த அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். இந்த சீசனில் இதுவரை 501 ரன்கள் குவித்துள்ள ஸ்மித், மும்பை பௌலர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டூ பிளெஸ்ஸியும் அபாரமாக ஆடி வருகிறார். மிடில் ஆர்டரில் கேப்டன் தோனி, டேவிட் ஹசி ஆகியோர் சூப்பர் கிங்ஸுக்கு பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் மோஹித் சர்மா, ஜடேஜா, பத்ரீ, அஸ்வின் ஆகியோரை நம்பியுள்ளது சூப்பர் கிங்ஸ். மோஹித் சர்மா இதுவரை 18 விக்கெட்டுகளையும், ஜடேஜா 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. சொந்த மண்ணில் விளையாடுவது மும்பை அணிக்கு கூடுதல் பலமாகும். லீக் சுற்றில் சென்னையிடம் கண்ட தோல்விகளுக்கு மும்பை பதிலடி கொடுக்குமா அல்லது கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் மும்பையிடம் கண்ட தோல்விக்கு சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுவரை

இவ்விரு அணிகளும் 2008 முதல் தற்போது வரை மொத்தம் 17 ஆட்டங்களில் மோதின. அதில் சென்னை 8 முறையும், மும்பை 9 முறையும் வெற்றி கண்டுள்ளன.

மும்பை இண்டியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), கோரே ஆண்டர்சன், ஜேஸ்பிரித் பூம்ரா, டி லேஞ்சி, பென் டங்க், சிதம்பரம் கௌதம், ஸ்ரேயாஸ் கோபால், ஹர்பஜன் சிங், ஜோஷ் ஹேஸில்வுட், மைக்கேல் ஹசி, பிரவீண் குமார், சுஷாந்த் மராத்தே, பிரக்யான் ஓஜா, கிரண் போலார்ட், அம்பட்டி ராயுடு, சன்டோக்கி, சிம்மன்ஸ், பவன் சுயால், ஆதித்ய தாரே, அபூர்வ் வான்கடே.

சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டுவைன் ஸ்மித், பிரென்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, டேவிட் ஹசி, ரவீந்திர ஜடேஜா, மிதுன் மன்ஹாஸ், அஸ்வின், ஈஸ்வர் பாண்டே, மோஹித் சர்மா, சாமுவேல் பத்ரீ, டூ பிளெஸ்ஸி, ஜான் ஹேஸ்டிங்ஸ், மேட் ஹென்றி, பென் ஹில்பெனாஸ், ஆசிஷ் நெஹ்ரா, அபராஜித், பவன் நெஹி, ரூனித் மோரே, விஜய் சங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x