Published : 07 Apr 2015 09:49 AM
Last Updated : 07 Apr 2015 09:49 AM
24-வது மாடியில் இருந்து குதியுங்கள் என்ற கேப்டன் தோனி கூறினால், அதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷாந்த் சர்மா காயம் காரணமாக அதில் விளையாட முடியாமல் போனது. இதனால் நாடு திரும்பிய இஷாந்த் இப்போது காயத்தில் இருந்து மீண்டு, ஐபிஎல் போட்டியில் விளையாட தயாராகிவிட்டார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கும் அவர் உலகக் கோப்பையில் விளையாட முடியாதது குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது என்பது அனைத்து கிரிக்கெட் வீரர்களின் முக்கிய ஆசையாக இருக்கும். எனக்கும் அந்த ஆசை உண்டு. 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அப்போது அணியில் இடம் கிடைக்கவில்லை. இப்போதைய உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் நான் தேர்வாக அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது.
இதனால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். அப்போது கேப்டன் தோனி எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தார். அவர் என்னை 24-வது மாடியில் இருந்த குதிக்கச் சொன்னால் தயங்காமல் குதித்து விடுவேன். நான் தோனிக்காக தயங்காமல் இதைச் செய்வேன். பந்து வீச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.
சமீபகாலமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும் தினமும் பயிற்சி மேற் கொண்டு வருகிறேன். இப்போது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன். புதிய உற்சாகத்துடன் ஐபிஎல் போட்டியில் களமிறங்க இருக்கிறேன். எனக்கு இப்போது 26 வயதுதான் ஆகிறது எனவே டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியிலும் விளையாட ஆர்வத்துடன் இருக்கிறேன்.
எங்களது ஹைதராபாத் அணியில் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். டிரென்ட் போல்ட், பிரவீண் குமார் இருப்பது எங்களுக்கு பலமளிக்கும். எங்கள் அணி இந்த இந்த ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடும் .டேல் ஸ்டெயின், புவனேஸ்வர் குமார் ஆகியோர் அணிக்கு கூடுதல் பலம். ஐபிஎல் போட்டிக்காக நான் தனிப்பட்ட முறையில் எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை. ஏனெனில் அது எனக்கு நானே நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்வதாக அமையும் என்று இஷாந்த் சர்மா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT