Published : 09 Apr 2015 08:01 PM
Last Updated : 09 Apr 2015 08:01 PM
2019 உலகக் கோப்பை போட்டிகளில் 10 அணிகள் மட்டுமே இடம்பெறுவதான ஐசிசி முடிவை கடுமையாக எதிர்த்து வரும் அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட், முன்னிலை அணிகளுடன் தங்கள் அணி விளையாடுவதற்காக ‘கதறி’ வருவதாக தெரிவித்தார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தங்களது நிலை பற்றி விளக்கினார்:
ஆம். 10 அணிகள் கொண்ட உலகக் கோப்பை என்பது ஒரு தீங்கான முடிவுதான். 2007 உலகக் கோப்பை போட்டிகளில் நாங்கள் தகுதி பெறாமல் போயிருந்தால், அயர்லாந்தில் கிரிக்கெட் இப்போது இருக்கும் நிலையில் நிச்சயம் இருக்க முடியாது என்று நான் உறுதியாகக் கூறுவேன்.
அயர்லாந்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்தான். அயர்லாந்துக்கு வந்து பார்த்தால்தான் தெரியும் கிரிக்கெட் அங்கு எப்படி விளையாடப்படுகிறது, அதன் ஆர்வம் என்பதெல்லாம் புரியும்.
எனவே ஐசிசியின் இந்த முடிவு வெறுப்பூட்டுகிறது. எங்களுக்கு மட்டுமல்ல, உலகக் கோப்பைக்கு தகுதி பெறத் துடிக்கும் எந்த ஒரு அணியாக இருந்தாலும்...நாங்கள் கஷ்டப்பட்டு தகுதி பெற்று வருகிறோம், மீண்டும் தகுதி பெற முடியாமல் போனால் அது மிகுந்த துன்பத்தை அளிக்கும்.
தானாகவே எங்கள் அணி தகுதி பெற வேண்டும். ஆனால் எங்களைப் போன்ற அணிகளுக்கு பெரிய அணிகளுடன் மோதும் வாய்ப்பு இடையில் எங்கு ஏற்படுத்தப்படுகிறது?
நாங்கள் டாப் 10 அணிகளுக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளில் 9 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளோம். டாப் 10 அணிகள் விளையாடுவதை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நாங்கள் விளையாடிய இந்த 9 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ஐசிசி தரவரிசையில் 8-ம் இடத்துக்கு வர முடியாது. அதிக போட்டிகளை டாப் அணிகளுடன் விளையாடிய பிறகே 8-ம் நிலையே சாத்தியம்.
இதற்காக பயணத்திட்டங்களை உருவாக்குவதும் கடினம். எனவே நாங்கள் மேல்நிலைக்கு வர ஏதாவது செய்ய வேண்டும்.
சர்வதேச அணிகளை ஏன் பல்வேறு வகைகளாகப் பிரிக்க வேண்டும்? ஏன் நாங்கள் அசோசியேட் அணிகள் மற்ற அணிகளெல்லாம் ‘முழு உறுப்பினர்’?
அயர்லாந்திலிருந்து இங்கிலாந்துக்கு 40 நிமிட நேரம்தான் விமானப்பயணம். இங்கிலாந்துக்கு அணிகள் வருகின்றன. அப்போது எங்களுடன் 2 அல்லது 3 போட்டிகளில் விளையாடலாம். இதனை மிகச் சுலபமாக செய்து விட முடியும். இதற்காகத்தான் நாங்கள் கதறி வருகிறோம்.
அயர்லாந்து ரசிகர்களும் பெரிய அணிகளுடன் நாங்கள் விளையாடுவதை பார்க்க துடித்து கொண்டிருக்கின்றனர்.
2019-ம் ஆண்டு உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. அயர்லாந்து விளையாடினால் ஸ்டேடியம் நிரம்பி வழிவது உறுதி. வர்த்தக ரீதியாகவும் இது பயனளிக்கும்” என்று போர்ட்டர்பீல்ட் தனது ஆசையை கொட்டித் தீர்த்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT