Published : 30 May 2014 10:00 AM
Last Updated : 30 May 2014 10:00 AM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரும், 8 முறை சாம்பியன் பட்டம் வென்றவருமான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-வது சுற்றில் நடால் 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தெய்மை தோற்கடித்தார்.
நடால் அடுத்த சுற்றில் ஆர்ஜென்டீனாவின் லியோனார்டோ மேயரை சந்திக்கிறார். மேயர் தனது 2-வது சுற்றில் 6-2, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டெய்முரஸ் கேபாஷ்விலியைத் தோற்கடித்தார்.
சானியா ஜோடி முன்னேற்றம்
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் டேனிலா ஹன்டுசோவா-இஸ்ரேலின் சாஹர் பீர் ஜோடியைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. சானியா ஜோடி தங்களின் அடுத்த சுற்றில் கனடாவின் கேப்ரிலா-போலந்தின் அலிஜா ரோஸோல்ஸ்கா ஜோடியை சந்திக்கிறது.
போபண்ணா ஜோடி அவுட்
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பாகிஸ்தானின் குரேஷி ஜோடி 3-6, 4-6 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் இல்லாத இஸ்ரேலின் ஜொனாதன் எர்லிச்-பிரேசிலின் மார்செலோ மெலோ ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT