Published : 15 Apr 2015 10:43 AM
Last Updated : 15 Apr 2015 10:43 AM

பஞ்சாப்- டெல்லி இன்று மோதல்

புனேவில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதுகின்றன.

முதல் இரு ஆட்டங்களில் தோல்வி கண்ட டெல்லி அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தோல்வியிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த ஐபிஎல் போட்டியிலிருந்து தற்போது வரை தொடர்ச்சியாக 11 தோல்விகளை சந்தித்துள்ள டெல்லி அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முயற்சிக்கும். ஆனால் பேட்டிங், பவுலிங் என எல்லாவற்றிலும் பலம் வாய்ந்ததாக திகழும் பஞ்சாப் அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.

டெல்லி அணியில் மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர், கேப்டன் டுமினி, யுவராஜ் சிங் என வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், அந்த அணியின் பந்துவீச்சு எடுபடவில்லை. முதல் ஆட்டத்தில் 73 ரன்கள் குவித்த அல்பி மோர்கல் கடந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட மேத்யூஸ் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. எனவே இந்த ஆட்டத்தில் அல்பி மோர்கல் சேர்க்கப்படலாம். அவர் இடம்பெறும்பட்சத்தில் மேத்யூஸ் அல்லது கோல்ட்டர் நீல் நீக்கப்படலாம்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜெயதேவ் உனட்கட் மட்டுமே சிறப்பாக பந்துவீசி வருகிறார். எனவே மற்ற வேகப்பந்து வீச்சாளர்களும் கட்டுக்கோப்பாக பந்து வீசினால் மட்டுமே பஞ்சாப் அணியின் ரன் குவிப்பை தடுக்க முடியும். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இம்ரான் தாஹிர், அமித் மிஸ்ரா கூட்டணியை நம்பியுள்ளது டெல்லி.

பஞ்சாப் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் சேவாக், முரளி விஜய், மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், கேப்டன் ஜார்ஜ் பெய்லி, விருத்திமான் சாஹா என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் நின்றுவிட்டாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடுவார்கள்.

வேகப்பந்து வீச்சில் சந்தீப் சர்மா, மிட்செல் ஜான்சன், அனுரீத் சிங் ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் அக்ஷர் படேல், ரிஷி தவன் ஆகியோரும் பஞ்சாபுக்கு பலம் சேர்க்கின்றனர்.

இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் 9 முறையும், டெல்லி 5 முறையும் வெற்றி கண்டுள்ளன.

போட்டி நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x