Published : 23 Apr 2015 08:11 AM
Last Updated : 23 Apr 2015 08:11 AM
சுரேஷ் ரெய்னாவின் அபாரமான அதிரடி மற்றும் ஆஷிஷ் நெஹ்ராவின் சவாலான பந்துவீச்சு ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸிடம் சரணடைந்தது.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரெய்னாவின் சிக்சர் மழை அரைசதத்துடன் 181 ரன்களை குவிக்க, தொடர்ந்து ஆடிய ராயல் சாலஞ்சர்ஸ் அணி ஆஷிஷ் நெஹ்ராவின் தொடக்க மற்றும் கடைசி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெய்ல் விளையாடவில்லை. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
மிட்செல் ஸ்டார்க் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்குத் திரும்பியதால், மீண்டும் ஒரு மெக்கல்லம்/ஸ்டார்க் சவாலை ரசிகர்கள் எதிர்நோக்கினர். ஆனால் இந்த முறை மெக்கல்லம், ஸ்டார்க்கிடம் அவுட் ஆகவில்லை. ஒரு பவுண்டரியை முதல் ஓவரில் அடித்தார். ஆனால் 2-வது ஓவரில் ஹரியானாவைச் சேர்ந்த லெக் பிரேக்/கூக்ளி பவுலரான சாஹலிடம் மெக்கல்லம் ஆட்டமிழந்தார். சாஹல் பந்தை மெக்கல்லம் கட் செய்ய அது நேராக பாயிண்டில் ருசோவிடம் கேட்ச் ஆனது.
இறங்கியது முதல் ஆக்ரோஷ அதிரடி காட்டிய ரெய்னா:
3-ம் நிலையில் களமிறங்கிய ரெய்னா முதல் பந்திலேயே தனது அதிரடி நோக்கத்தை வெளிப்படுத்தி மேலேறி வந்து சாஹல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.
மறு முனையில் டிவைன் ஸ்மித், சாஹல் வீசிய 4-வது ஓவரில் ஒரு எட்ஜ் பவுண்டரியும் புல் ஷாட் சிக்ஸையும் அடித்தார். ஹர்ஷல் படேல் பந்து வீச வந்தார். அவர் ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசி ரெய்னா அவரை வரவேற்றார்.
டேவிட் வெய்ஸ் பந்து வீச வந்தவுடன் ரெய்னா தனது முதல் சிக்ஸை நேராக அடித்தார். மிகவும் அலட்சியமான சிக்ஸ் அது. வெய்ஸ் மிகவும் காஸ்ட்லியான பவுலர் ஆனார். அவரது அடுத்த ஓவரில் டிவைன் ஸ்மித் இரண்டு சிக்சர்களை அடுத்தடுத்து அடித்தார். பிறகு ஒரு பவுண்டரியையும் அடித்து 8-வது ஓவரில் 17 ரன்கள் சேர்த்தார். 29 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 39 ரன்கள் எடுத்த ஸ்மித் 9-வது ஓவரில் ஹர்ஷல் படேல் பந்தை எட்ஜ் செய்து தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்தார்.
அதன் பிறகு ஆட்டம் ரெய்னாவின் கைக்கு மாறியது. இக்பால் அப்துல்லா பந்தை டீப் மிட்விக்கெட் பவுண்டரியில் ரசிகர்கள் மத்தியில் சிலபல வரிசைகள் தள்ளி போய் விழுமாறு மிகப்பெரிய சிக்சரை விளாசினார் ரெய்னா. தோனி களமிறங்கி 2 பவுண்டரிகளை அடித்தார். மீண்டும் இக்பால் அப்துல்லாவை மேலேறி வந்து ரெய்னா லாங் ஆனில் ஒரு அபாரமான சிக்ஸரை விளாசினார்.
இதன் பிறகுதான் சாஹல், ரெய்னாவிடம் சிக்கினார். ஆட்டத்தின் 13-வது ஓவரில் லாங் ஆன் மற்றும் மிட்விக்கெட்டில் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை அடித்தார். ரெய்னா. 32 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து ஒரு முடிவுடன் சென்று கொண்டிருந்த ரெய்னா, சாஹல் பந்தை மேலேறி வந்து இன்னொரு சிக்சருக்கு முயன்று லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
13 பந்துகளில் 5 பந்துகளில் லொட்டு வைத்த தோனி 13 ரன்களில் சாஹலின் சாதாரண பந்துக்கு அசாதாரணமாக ஏதோ செய்ய நினைத்து கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தோனி பேட்டிங் வர வர அறுவை என்ற வகைமைக்குச் சென்று கொண்டிருப்பதை காண முடிந்தது, இக்பால் அப்துல்லாவின் ஒரு ஓவரில் 4 பந்துகளை தொடர்ச்சியாக லொட்டு வைத்து ரசிகர்களின் எரிச்சலை சம்பாதித்துக் கொண்டார்.
அபராஜித், பவன் நேகி போன்ற வீரர்கள் இருந்தும் தொடர்ச்சியாக ஜடேஜாவுக்கு வாய்ப்புகளை எளிதாக வழங்கி வரும் தோனிக்கு ஜடேஜா நேற்றும் நியாயம் செய்யவில்லை 8 ரன்களில் அவுட் ஆனார். கடைசியில் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் 18 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சர் அடித்து 33 ரன்கள் எடுத்ததினால் 181ரன்களை எட்ட முடிந்தது. ரெய்னா அவுட் ஆகும் போது 12.5 ஓவர்களில் 124 ரன்கள் என்று இருந்த சென்னை அணி அடுத்த 43 பந்துகளில் 57 ரன்களையே எடுத்தது.
அதுவும் டு பிளெஸ்ஸிஸ் இன்னிங்ஸினால். பிராவோ, அஸ்வின் சோபிக்கவில்லை. பிராவோ, அஸ்வினுக்கும் முன்னதாக ஜடேஜாவை களமிறக்க அவர் தகுதியானவர்தானா? அணியில் நீடிக்கவும் ஜடேஜா தகுதியானவர்தானா? போன்ற எக்கச்சக்க கேள்விகளுக்கு தோனி சீரியசாக பதில் கூற வேண்டிய நேரம் வந்து விட்டது. ஸ்டார்க் சிறப்பாக வீசி 4 ஓவர் 24 ரன்கள் 1 விக்கெட்டை கைப்பற்றினார். சாஹல் ரன் கொடுத்தாலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்ஷல் படேலும் சிக்கனமாக வீசினார்.
நெஹ்ராவின் அபாரப் பந்து வீச்சில் சரணடைந்த பெங்களூரு:
கிறிஸ் கெய்ல் இல்லாததால் பிஸ்லா, ருசோவ் களமிறங்கினர். பிஸ்லா, ஈஷ்வர் பாண்டேயை 2 பவுண்டரிகள் விளாசினார். பிறகு ரூசோவ், பிஸ்லா இணைந்து மோஹித் சர்மாவை பிரித்தெடுத்து 19 ரன்களை விளாசினர்.
அப்போதுதான் நெஹ்ரா 4-வது ஓவரில் பிஸ்லா, ருசோவ் இருவரையும் வெளியேற்றினார். அப்போது முதல் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு ரன்விகிதம் சரியத் தொடங்கியது.
விராட் கோலி தொடக்கத்தில் எச்சரிக்கையுடன் ஆடினார். அணியின் நலனை விட தனது சொந்த பார்ம் குறித்த அக்கறை அவரது இன்னிங்ஸில் தெரிந்தது. செட்டில் ஆன பிறகு அஸ்வின் வீசிய 8-வது ஓவரில் கோலி 2 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்தார். அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக் கொஞ்சம் நின்று கூட ஆடியிருப்பார். ஆனால் பாண்டே வீசுவதற்கு முன்னால் விராட் கோலி அவரிடம் போய் ஏதோ முணுமுணுக்க தினேஷ் கார்த்திக் பந்தை அடிக்க அது நேராக லாங் ஆனில் பிராவோவிடம் கேட்ச் ஆனது. முன்னால் டைவ் அடித்து பிராவோ அபாரமாக கேட்ச் பிடித்து தனது வழக்கமான கொண்டாட்ட டான்ஸைப் போட்டார்.
ஏ.பி.டிவில்லியர்ஸ் 2 சிக்சர்களுடன் 14 ரன்கள் எடுத்து தோனியின் அபார சாதுரியத்தினால் ரன் அவுட் ஆனார். 2-வது ரன்னை எடுக்க டிவில்லியர்ஸ் ஓடி வந்தபோது ஸ்மித்தின் சாதாரண த்ரோவை தோனி ரன் அவுட் ஆக மாற்றினார்.
மறு முனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார் கோலி. 5 விக்கெட்டுகள் சரிய 6 ஓவர்களில் 83 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த கோலியையும் ஹர்ஷல் படேலையும் மீண்டும் ஆஷிஷ் நெஹ்ரா 17-வது ஓவரில் வீழ்த்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு கதை அத்துடன் முடிந்தது. 154/8 என்று 27 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து புள்ளிகள் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது.
நெஹ்ரா 4 ஓவர்களில் 10 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின் ஒரே ஓவரில் கோலியிடம் 17 ரன்கள் வாங்கிக் கட்டிக் கொண்டதோடு பந்து வீச அழைக்கப்படவில்லை. ஜடேஜா தண்டமாக வீசி 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT