Published : 02 Apr 2015 10:22 AM
Last Updated : 02 Apr 2015 10:22 AM
நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்துப் பேசிய அவர், “கடந்த 14 ஆண்டுகள் நியூஸிலாந்து அணிக்காக விளை யாடியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகும். இனிமேல் விளையாட முடியாது என்பது மிகப் பெரிய இழப்புதான்.
அதே நேரத்தில் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதற்கு இதுதான் சரியான தருணம். நான் நேசித்த கிரிக்கெட்டை நான் விளையாடுவதற்காக எனது குடும்பத்தினர் நிறைய தியாகங்களை செய்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்” என்றார்.
14 ஆண்டுகள் நியூஸிலாந்து அணிக்காக விளையாடியுள்ள மில்ஸ், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருந்துள்ளார். அதிலும் முதலிடத்தில் நீண்ட நாட்கள் இருந்துள்ளார்.
170 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மில்ஸ் 240 விக்கெட்டுகளுடன் ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய நியூஸிலாந்து வீரர்கள் வரிசையில் வெட்டோரிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார். இதுதவிர 19 டெஸ்ட் போட்டிகளிலும், 42 டி20 போட்டிகளிலும் மில்ஸ் விளையாடியுள்ளார்.
கடந்த சில தினங்களில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற 2-வது நியூஸிலாந்து வீரர் மில்ஸ் ஆவார். முன்னதாக டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT