Published : 21 Apr 2015 02:39 PM
Last Updated : 21 Apr 2015 02:39 PM

கிரீஸை விட்டு வெளியே வந்து புதிரான முறையில் ஆட்டமிழந்த யுவராஜ் சிங்

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டேர் டெவில்ஸ் அதிக விலை கொடுத்து வாங்கிய யுவராஜ் சிங் விசித்திரமான முறையில் ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் டெல்லி அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவர் அற்புதமாக அமைய கடைசி ஓவரில் முதல் 3 பந்துகளில் 3 ரன்கள், கடைசி 3 பந்துகளில் ரன் இல்லை. அஞ்சேலோ மேத்யூஸுக்கு உமேஷ் யாதவ்வின் பந்தை மட்டையுடன் தொடர்பு படுத்த முடியாமல் போனது.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கம்பீர் 60 ரன்களையும், யூசுப் பதான் அதிரடி 40 ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா அணியின் 3-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணி பேட் செய்த போது யுவராஜ் சிங் 19 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 9--வது ஓவரில் இறங்கிய யுவராஜ் 15-வது ஓவர் கடைசி பந்தில் விசித்திரமாக அவுட் ஆனார்.

பியூஷ் சாவ்லா வீசிய அந்த 15-வது ஓவரின் 5-வது பந்தை புல் ஆடி மிட்விக்கெட்டில் வலுவான பவுண்டரி அடித்தார் யுவராஜ். கடைசி பந்து லெக் ஸ்டம்பில் விழ அதனை ஸ்வீப் ஆட முயன்றார் யுவராஜ் ஆனால் பந்து மட்டையில் சிக்கவில்லை. பந்து கீப்பரிடம் சென்றது, பந்து டெட் ஆகவில்லை. ஆனால் யுவராஜ் சிங் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கிரீஸை விட்டு 2 தப்படி நடந்து வெளியே வந்தார். ஏன் அப்படி செய்தார் என்றே தெரியவில்லை.

விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பாவின் ஸ்டம்பிங் முயற்சி முதல் முறை தோல்வியடைந்தது. யுவராஜ் அப்போதுதான் விழித்துக் கொண்டார். ஆனால் தாமதமான விழிப்பானது அது. 2-வது முயற்சியில் உத்தப்பா ஸ்டம்பிங் செய்து விட்டார். யுவராஜ் 21 ரன்களில் அவுட் ஆனார்.

பந்து ஆட்டத்தில் உயிர்ப்புடன் இருக்கும் போது அவர் ஏன் கிரீஸை விட்டு வெளியே வந்தார் என்று புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

பின்பு பியூஷ் சாவ்லா இது பற்றி கூறும் போது, “ ஸ்வீப் ஆட முயன்ற யுவராஜ் சிங்கின் பேடில் பட்டு சென்றது பந்து. ஆனால் அவர் ஃபைன்லெக் திசைக்குச் சென்றதாக நினைத்து ஓட முயற்சி செய்திருக்கலாம். ஆனால் சிறிது நேரம் கழித்து அவர் பந்து அருகில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தார். ஆனால் மீண்டும் கிரீஸுக்குள் வருவதற்குள் ஸ்டம்ப்டு ஆனார்.” என்றார்.

நேற்றைய ஆட்டத்தில் டேர் டெவில்ஸ் பேட்ஸ்மென்கள் மோசமான ஷாட் தேர்வில் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் அற்புதமான சில பேக்ஃபுட் ஷாட்களை ஆடி 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து சாவ்லா பந்தை சுழற்றி பவுல்டு ஆனார். திவாரி, யுவராஜ் சிங் 4-வது விக்கெட்டுக்காக 37 ரன்களை சேர்த்தனர். திவாரி 32 ரன்கள் எடுத்து நன்றாக ஆடிவந்த நிலையில் மோசமான ஷாட் தேர்வுக்கு மோர்னி மோர்கெலிடம் வீழ்ந்தார்.

கடைசியில் அஞ்சேலோ மேத்யூஸ், கேதர் ஜாதவ் அதிரடியில் டெல்லி அணி 146 ரன்களை எட்டியது. சுனில் நரைன் வீசிய 19-வது ஓவரில் 20 ரன்களை விளாசினர் இருவரும்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியில் கம்பீர், உத்தப்பா 4 ஓவர்களில் 31 ரன்கள் தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் 5-வது ஓவரில் டொமினிக் ஜோசப் முத்துசாமி உத்தப்பா, பாண்டே இருவரையும் வெளியேற்றினார்.

சூரியகுமார் யாதவ் சில பவுண்டரிகளுடன் கம்பீருடன் இணைந்து 48 ரன்களைச் சேர்த்தார். ஆனால் கம்பீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அபாரமான நுணுக்கத்துடன் ஆடி கம்பீர் 60 ரன்களை எடுத்தார். யூசுப் பதான் 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

கம்பீர் எடுக்கும் 3-வது அரைசதம் ஆகும் இது. ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடர்ச்சியாக 9-வது முறையாக டெல்லி அணி தோல்வி அடைந்தது. 4 ஓவர்களில் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய உமேஷ் யாதவ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x