Published : 20 Apr 2015 08:46 PM
Last Updated : 20 Apr 2015 08:46 PM
லங்காஷயர் செகண்ட் லெவன் அணிக்கு விளையாடும் லியாம் லிவிங்ஸ்டோன் என்ற ஆல் ரவுண்டர், நேற்று ஒருநாள் போட்டி ஒன்றில் 138 பந்துகளில் 350 ரன்கள் குவித்து சாதனை புரிந்துள்ளார்.
நாண்ட்விட்ச் என்ற கிளப்புக்கு ஆடிய லியாம் லிவிங்ஸ்டோன் ராயல் லண்டன் கிளப் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒயிட் ஹவுஸ் லேனில் கால்டி என்ற அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 138 பந்துகளில் 350 ரன்களை விளாசித் தள்ளியுள்ளார். இவர் விளையாடிய நாண்ட்விட்ச் அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 579 ரன்கள் குவிக்க எதிரணியான கால்டியோ 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்களையே எடுத்தது.
21 வயதான லியாம் லிவிங்ஸ்டோன் இந்த 350 ரன்களில் 34 பவுண்டரிகளையும் 27 சிக்சர்களையும் விளாசித் தள்ளினார்.
இவர் உடைத்தது ஒரு இந்திய வீரரின் சாதனையைத்தான் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. 2008-ம் ஆண்டு ஐதராபாத்தில் பள்ளிகள் மட்ட கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டியில் நிகிலேஷ் சுரேந்திரன் என்ற 15 வயது சிறுவர் 334 ரன்களை எடுத்திருந்தார். அதனை இப்போது 21 வயது லிவிங்ஸ்டோன் முறியடித்துள்ளார்.
லியாம் லிவிங்ஸ்டோன் தனது பவர் ஹிட்டிங்கை இப்போது முதல்முறையாகக் காண்பிக்கவில்லை. லங்காஷயர் செகண்ட் லெவன் அணிக்காக இவர் கடந்த ஆண்டு 242 பந்துகளில் 204 ரன்களை யார்க்ஷயருக்கு எதிராகக் குவித்துள்ளார்.
இதற்கும் முன்னதாக டி20 போட்டி ஒன்றில் யார்க்ஷயர் கிளப்புக்கு எதிராக 47 பந்துகளில் அதிரடி சதமும் எடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT