Published : 04 Apr 2015 05:15 PM
Last Updated : 04 Apr 2015 05:15 PM
சமீபத்திய மிகப் பெரிய ஊக்க மருந்து விவகாரம் என்று அழைக்கப்படும் தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்திய வலுதூக்குதல் வீரர்கள் 21 பேருக்கு இந்திய வலுதூக்குதல் கூட்டமைப்பு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
பல்வேறு வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவர்கள் விளையாடிய போது இவர்களது சிறுநீர் சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டதில் 21 வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், பெரும்பாலான வீரர்கள் சிக்கியது தேசிய இளையோர் சாம்பியன்ஷிப் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொண்டது தெரியவந்தது.
இந்தத் தொடரின் போது வலுதூக்குதல் வீரர்கள் 8 பேர் மாதிரிகளில் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது அம்பலமானது.
இளையோர் வலுதூக்குதல் 63 கிலோ பிரிவில் தங்கம் வென்ற பஞ்சாப் மாநிலத்தின் சிமன்ப்ரீத் கவுர் ஊக்க மருந்து எடுத்து கொண்டது நிரூபணமானது. இதே தொடரில் அம்ரித்பால் சிங் (85 கிலோ, தங்கம்), அர்ஷ்தீப் கவுர் (58 கிலோ, வெள்ளி) ஆகியோரும் தடை செய்யப்பட்ட மருந்தை எடுத்து கொண்டே வெற்றி பெற்றுள்ளனர்.
கேரளாவில் நடைபெற்ற 35-வது தேசியப் போட்டிகளின் போது ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்த 4 எடைதூக்குதல் வீரர்களில் 3 பேர் வடக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
2006 காமன்வெல்த் தங்க வீராங்கனை கீதா ராணி (பஞ்சாப்), ஹர்ஜீத் கவுர் (ஹரியானா), மாங்தே பி.கோம் (சண்டிகர்), கோமல் வகாலே (மராட்டியம்) ஆகியோர் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்தனர்.
இது பற்றி இந்திய வலுதூக்குதல் கூட்டமைப்பு தலைமைச் செயலர் சாதேவ் யாதவ் கூறும்போது, “ஆம். எடைதூக்கும் வீரர்கள் 21 பேர் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களது ‘பி’ சாம்பிள்கள் மீதான சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
நாட்டின் மிகப்பெரிய ஊக்க மருந்து விவகாரம் ஆகும் இது, ஆனால் இதில் பல்கலை விளையாட்டுப் போட்டிகள், போலீஸ் துறை விளையாட்டுப் போட்டிகள், ரயில்வே துறை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிற போட்டிகள் அடங்கும் என்பதையும் நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது நலம்” என்றார்.
சிறுநீர் ‘பி’ மாதிரியிலும் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது நிரூபணமானால் 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படும். இந்த 21 எடைதூக்குதல் வீரர்களின் பயிற்சியாளர்களும் கூட தடை செய்யப்படவும், அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT