Last Updated : 11 Apr, 2015 09:41 AM

 

Published : 11 Apr 2015 09:41 AM
Last Updated : 11 Apr 2015 09:41 AM

தோனி படையின் வெற்றி தொடருமா?- சன்ரைஸர்ஸுடன் இன்று மோதல்

சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன.

முதல் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சூப்பர் கிங்ஸ், இந்த ஆட்டத்தில் இன்னும் சிறப்பாக ஆடி வெற்றி பெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் அணிக்கு இது முதல் போட்டி என்பதால் அந்த அணி வெற்றியோடு தொடங்க முனைப்பு காட்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யைப் பொறுத்தவரையில் வெற்றிக் கூட்டணியை கேப்டன் தோனி மாற்ற விரும்பமாட்டார் என்பதால் அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. டெல்லிக்கு எதிராக டுவைன் ஸ்மித், டூ பிளெஸ்ஸி, கேப்டன் தோனி ஆகியோர் மட்டுமே சிறப்பாக ஆடினர். எஞ்சிய வீரர்கள் சொதப்பியதால் வலுவான ஸ்கோரை எட்ட முடியவில்லை.

கடந்த ஆட்டத்தில் 4 ரன்களில் நடையைக் கட்டிய மெக்கல்லம், இந்த ஆட்டத்தில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத் திக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 3-வது வீரராக களமிறங்கிய ரெய்னா ஜொலிக்கவில்லை. அதனால் இந்த ஆட்டத்தில் டூ பிளெஸ்ஸி 3-வது வீரராகவும், ரெய்னா 4-வது வீரராகவும் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பின்வரிசையில் பிராவோ, ஜடேஜா ஆகியோர் வேகமாக ஆடினால் மட்டுமே நல்ல ஸ்கோரை குவிக்க முடியும். ஆமை வேகத்தில் ஆடி வரும் ஜடேஜா, வேகமாக ரன் சேர்ப்பது அவசியம்.

பந்துவீச்சைப் பொறுத்த வரையில் கடந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நெஹ்ரா, இந்த முறையும் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மோஹித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, பிராவோ ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அஸ்வின் அசத்தலாக பந்துவீசி வருவது சென்னை அணிக்கு கூடுதல் பலமாகும்.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் டேவிட் வார்னர், ஷிகர் தவன், கே.எஸ்.ராகுல், நமன் ஓஜா, இயோன் மோர்கன்/ரவி போபாரா, ஹனுமா விஹாரி, ஆசிஷ் ரெட்டி, டேல் ஸ்டெயின், டிரென்ட் போல்ட், கரண் சர்மா, இஷாந்த் சர்மா/புவனேஸ்வர் குமார் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேவிட் வார்னர், ஷிகர் தவன் ஆகியோர் ஏற்படுத்திக் கொடுக்கும் தொடக்கத்தை பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். அதிரடிக்கு பெயர்போன இவர்களில் ஒருவர் 10 ஓவர்கள் ஆடினாலும், அது அந்த அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும். மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான நமன் ஓஜா, ஹனுமா விஹாரி, ஆசிஷ் ரெட்டி ஆகியோர் நெருக்கடியின்றி அதிரடியாக ஆடி ரன் குவிக்க முடியும். பந்துவீச்சில் டேல் ஸ்டெயின், டிரென்ட் போல்ட், கரண் சர்மா கூட்டணியை நம்பியுள்ளது சன்ரைஸர்ஸ்.

போட்டி நேரம்: மாலை 4

நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் 3 ஆட்டங்களில் வென்றுள்ள சூப்பர் கிங்ஸ், ஓர் ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x