Published : 17 Apr 2015 02:46 PM
Last Updated : 17 Apr 2015 02:46 PM
ஆண்டிகுவாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான நேற்று இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸை 333/7 என்ற நிலையில் முடித்துக் கொண்டதாக அறிவித்தது.
இதனையடுத்து மே.இ.தீவுகள் அணிக்கு 438 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் மே.இ.தீவுகள் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.
டி.எஸ்.ஸ்மித் 59 ரன்களுடனும், சாமுயெல்ஸ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பிராத்வெய்ட் 5 ரன்களில் பிராடிடமும், டேரன் பிராவோ 32 ரன்களில் ஜோ ரூட்டிடமும் ஆட்டமிழந்தனர்.
முன்னதாக 116/3 என்று தொடங்கிய இங்கிலாந்து கேரி பேலன்ஸ் (122) சதத்துடனும் ஜோ ரூட் (59) அரைசதத்துடனும், கடைசியில் ஜோஸ் பட்லர் 56 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 59 ரன்களையும் எடுக்க 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
முதல் மூன்றரை மணி நேர ஆட்டம் இங்கிலாந்து எதிர்பார்த்தது போல் சென்றது. கேரி பேலன்ஸ் தனது 4-வது டெஸ்ட் சதத்தை எடுத்து முடித்தார். தேநீர் இடைவேளைக்கு அரைமணி முன்னதாக டிக்ளேர் செய்யப்பட்டது.
மே.இ.தீவுகள் தொடக்க வீரர் பிராத்வெய்ட், பிராடின் நல்ல திசையில் வீசப்பட்ட எழுச்சிப் பந்துக்கு பலியானார். அவர் மார்புயரம் பந்து வர தடுத்தாடினார். ஆனால் பேக்வர்ட் ஷார்ட் லெக்கில் ரூட் இதற்காகவே நிறுத்தப்பட்டிருந்தார். கேட்ச் ஆனது.
அதன் பிறகு டெவன் ஸ்மித், டேரன் பிராவோ பிரச்சினைகளை திறம்பட எதிர்கொண்டனர்.
ஆனால் ஜோ ரூட்டின் பகுதி நேர ஸ்பின் பந்துவீச்சில் டேரன் பிராவோ டிரைவ் ஆட முயல பந்து கால் தடத்தில் பட்டு திரும்பியது, மட்டையின் விளிம்பில் பட ஜோர்டானிடம் தாழ்வாக ஸ்லிப் திசையில் வலது புறமாகச் செல்ல டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் ஜோர்டான், மிக அருமையான கேட்ச். மிகச்சிறந்த கேட்ச்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய கேட்ச் அது. ஆனால் அதன் பிறகு டெவன் ஸ்மித் கொடுத்த அதே பாணியிலான கேட்சை ஜோர்டானால் பிடிக்க முடியவில்லை.
அதன் பிறகு ஆட்ட நேர முடிவு ஓவர்களில் சாமுயெல்ஸ் 16 பந்துகளை எதிர்கொண்டு வேதனை அனுபவித்தார்.
இன்று 5-ம் நாள் ஆட்டம். மே.இ.தீவுகள் டிராவுடன் தப்பிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கடினம்தான் ஏனெனில் டிரெட்வெல் அருமையாக வீசி வருகிறார். இன்று ஜோ ரூட் வீசிய முனையில் டிரெட்வந்தால் நிச்சயம் பந்துகள் திரும்பவும் எழும்பவும் செய்யும். மே.இ.தீவுகள் தாக்குப் பிடித்தால் பெரிய ஆச்சரியம்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT