Published : 11 Apr 2015 08:42 PM
Last Updated : 11 Apr 2015 08:42 PM
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மெக்கல்லம், தோனி ஆகியோரின் அதிரடியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி படுதோல்வி அடைந்தது.
மெக்கல்லம் 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 100 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக திகழ, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 53 ரன்களை விளாச சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய டேவிட் வார்னர் தலைமை, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அஸ்வின், பிராவோ அபாரமான சிக்கனத்துடன் வீசினர். சென்னை அணி 2-வது வெற்றியைத் தொடர்ச்சியாக பெற்றது. டேல் ஸ்டெய்னுக்குப் பதிலாக டிரெண்ட் போல்ட்டை எடுத்திருந்தனர். ஆனால் இஷாந்த் சர்மாவையே உட்கார வைத்திருக்க வேண்டும். இதனை ஏனோ செய்யவில்லை.
மட்டை ஆட்டக்களத்தில் டாஸ் வென்ற தோனி முதலில் பெட் செய்ய முடிவெடுத்தார்.
மெக்கல்லத்திடம் சிக்கி இஷாந்த் சர்மா பரிதாபம்:
டிவைன் ஸ்மித், மெக்கல்லம் தொடங்கினர், சன்ரைசர்ஸ் துரதிர்ஷ்டம் இன்று மெக்கல்லம் முடிவு செய்துவிட்டார் நிற்பதென்று. பிறகு என்ன செய்ய முடியும்? அதன் பிறகு எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. உலகக் கோப்பையின் சிறந்த பவுலர் டிரெண்ட் போல்ட், புவனேஷ் குமார் ஆகியோர் வீசினர். 3-வது ஓவரில் குமாரை இறங்கி வந்து சிக்ஸ் அடித்து தொடங்கினார் மெக்கல்லம். 5-வது ஓவரி இஷாந்த் வீசினார். 2 நோபால்கள் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் கொடுத்தார்.
6-வது ஓவரிலேயே கரண் சர்மா கொண்டு வரப்பட்டார். அரைக்குழி பந்தை பேயடி அடித்தார் மெக்கல்லம் சிக்சருக்குப் பறந்தது. பவர் பிளே முடிவில் 49/0.
7-வது ஓவர் இஷாந்த் சர்மா வந்தார். இவர் பாவம் ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக சர்வதேச போட்டிகளில் கூட காயமடைந்து விடக்கூடாது என்று ஜெண்டில்மேன் பந்துவீசியவர். முதல் பந்தே ஸ்மித் லாங் ஆஃபில் ஒரே அடி அடித்தார், பவுண்டரி. மீண்டும் ஒரு நோபால். ஃப்ரீ ஹிட், மேலேறி வந்து கொசு அடிப்பது போல் அடித்தார் பந்து லாங் ஆனில் சிக்ஸ். கடைசி பந்து யார்க்கர் முயற்சி தவறாக அமைய ஆஃப் திசையில் மீண்டும் ஒரு பேயடி, மெக்கல்லமுக்கு மேலும் ஒரு பவுண்டரி கிடைத்தது. 8 ஓவர்களில் ஸ்கோர் 75/0.
9-வது ஓவரில் 27 ரன்கள் எடுத்த ஸ்மித் ரன் அவுட் ஆனார். 10-வது ஓவரில் பர்வேஸ் ரசூல் வந்தார். மெக்கல்லம் முதல் பந்து ஷார்ட் பிட்ச் ஆஃப் திசையில் பவுண்டரி விளாசினார் மெக்கல்லம், பிறகு ஒரு லாங் ஆனில் ஒரு சிக்ஸ். 10-வது ஓவர் முடிவில் 89/1 என்று இருந்தது சென்னை. ரெய்னா களமிறங்கி ஒரேயொரு பவுண்டரி அடித்தார்.
12-வது ஓவரில் மீண்டும் இஷாந்த் சர்மா, மெக்கல்லமிடம் சிக்கினார், ஒரு மிகப்பெரிய சிக்ஸ் அடித்து 38 பந்துகளில் அரை சதம் கண்டார். அதே ஓவரில் நோ-பாலில் மீண்டும் ஒரு பவுண்டரி, பிறகு ஃப்ரீ ஹிட் மிடில் ஸ்டம்பில் வந்த புல்டாஸை கீப்பர் தலைக்குப் பின்னால் ஒரு சிக்ஸ். 23 ரன்களை விட்டுக் கொடுத்தார் இஷாந்த் சர்மா.
அதன் பிறகு கரண் சர்மாவை 2 சிக்சர்களை அடுத்தடுத்து அடித்தார் மெக்கல்லம். சுரேஷ் ரெய்னா 14 ரன்களில் ரன் அவுட் ஆனார். மெக்கல்லம் 85 ரன்களில் இருந்த போது வில்லியம்சன் ஒரு கேட்ச் விட்டார்.
தோனி களமிறங்கினார்... அவரது பேட்டிங் மீது சமீபகாலங்களாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவரால் முன்னைப்போல் ரன்களை விரைவாக எடுக்க முடிவதில்லை என்றும், பவுலர்கள் தோனியைக் கண்டு அச்சப்படுவதில்லை என்ற ரீதியிலும் விமர்சனங்கள் எழுந்தன.
அதையெல்லாம் கேள்விப்பட்டுத்தானோ என்னவோ இன்று முன்பாகவே களமிறங்கி புவனேஷ் குமாரை ஒரு சிக்சர் விளாசினார். பிறகு கரன் சர்மாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசித் தள்ளினார். பொபாராவை 2 பவுண்டரிகள் பிறகு போல்ட்டை ஒரு பவுண்டரி அடித்து 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து 29-வது பந்தில் அவுட் ஆனார்.
இவர் களமிறங்கும் போது மெக்கல்லம் 80 ரன்களில் இருந்தார். ஆனால் தோனி, அவருக்கு ஸ்ட்ரைக்கே கொடுக்கவில்லை. தோனி 53-ல் அவுட் ஆகிச் செல்லும் போது மெக்கல்லம் 89 ரன்களில் இருந்தார். தோனி, ஜடேஜா அடுத்தடுத்த போல்ட் பந்துகளில் அவுட் ஆகி வெளியேறினர்.
அதன் பிறகு அதே 20-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸ், சிங்கிள் எடுத்து 56 பந்துகளில் சதம் கண்டார் மெக்கல்லம் அவரது 2-வது ஐபிஎல் சதம் இது. முதல் சதம் முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக எடுத்தது. 20 ஓவர்களில் சென்னை 209 ரன்கள். நன்றி: இஷாந்த் சர்மா- 3 ஒவர்களில் 46 ரன்கள் விட்டுக் கொடுத்து சாத்துமுறை வாங்கினார்.
அறுவையாகிப் போன சன்ரைசர்ஸ் பேட்டிங்:
இலக்கைத் துரத்திய களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி எந்த நிலையிலும் வெற்றிபெறும் தோரணையில் இல்லவேயில்லை. ஷிகர் தவன், கே.எல்.ராகுல் ஆகியோர் மோஹித் சர்மாவின் ஸ்லோ பந்தில் காலியாயினர். அதிரடி வீரர் வார்னரைக் கட்டிப்போட்டனர் சென்னை பவுலர்கள்.
அவர் மந்தமான ஒரு அரைசதம் எடுத்தார் அவ்வளவே. அஸ்வின் அபாரமாக வீசி 4 ஓவர்களில் 22 ரன்களையே விட்டுக் கொடுத்தார். நமன் ஓஜா விக்கெட்டையும் கைப்பற்றினார். பிராவோ, மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜடேஜா ஒரு ஓவரில் 17 ரன்கள் கொடுத்தார், பிறகு கொண்டு வரப்படவில்லை.
முதல் போட்டியில் ஜடேஜா பந்து வீசியதாக நினைவில்லை. பின்பு ஏன் அவரை அணியில் வைத்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்? அபராஜித் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது. 164 ரன்களுக்கு சன்ரைசர்ஸ் மட்டுப்பட்டது. தோனியின் ஜடேஜா பாசம் தொடர்கிறது.
ஆட்ட நாயகனாக பிரெண்டன் மெக்கல்லம் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT