Published : 11 Apr 2015 09:38 AM
Last Updated : 11 Apr 2015 09:38 AM

கொல்கத்தா-பெங்களூர் இன்று பலப்பரீட்சை

கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸும் மோதுகின்றன.

கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு கேப்டன் கம்பீர், ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். கடந்த போட்டியில் கம்பீர் 57, பாண்டே 40, சூர்யகுமார் 46 ரன்கள் சேர்த்தனர். அவர்களின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என நம்பலாம். பின்வரிசையில் ஷகிப் அல்ஹசன், யூசுப் பதான், ஆண்ட்ரே ரஸல் போன்ற ஆல்ரவுண்டர்கள் பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் மோர்ன் மோர்கல் மிகப்பெரிய துருப்பு சீட்டாக உள்ளார். அவர் கடந்த ஆட்டத்தில் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். உமேஷ் யாதவ், ஆன்ட்ரே ரஸல் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர். சுனில் நரேன், அல்ஹசன், பியூஷ் சாவ்லா என 3 சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் உள்ளனர். இவர்கள் 3 பேரும் பெங்களூர் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர் அணியில் கிறிஸ் கெயில், மன்விந்தர் பிஸ்லா/மன்தீப் சிங், விராட் கோலி, டிவில்லியர்ஸ், தினேஷ் கார்த்திக், பத்ரிநாத், டேரன் சமி, வருண் ஆரோன், யுவேந்திர சாஹல், அசோக் திண்டா, சீன் அபாட்/ஆடம் மில்னி ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெயில், கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரில் ஒருவர் நின்றுவிட்டாலும் கொல்கத்தா பவுலர்களின் பாடு திண்டாட்டம்தான். ஆனாலும் நரேனின் பந்துவீச்சு அவர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என தெரிகிறது. உலகக் கோப்பையில் அசத்தலான ஆட்டத்தை ஆடிய கையோடு களமிறங்கும் டிவில்லியர்ஸும், கெயிலும் நிச்சயம் வாணவேடிக்கை காட்டு வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் வருண் ஆரோன், அசோக் திண்டா, டேரன் சமி ஆகியோருடன் 4-வது பவுலராக சீன் அபாட் அல்லது மில்னி களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சீன் அபாட்டுக்கே அதிக வாய்ப்புள்ளது. கடந்த நவம்பரில் அபாட் வீசிய பவுன்சரில்தான் பில் ஹியூஸ் மரணமடைந்தார். எனவே அவர் களமிறங்கும்பட்சத்தில் கொல்கத்தா பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹலை நம்பியுள்ளது பெங்களூர் அணி.

போட்டி நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

இதுவரை

கொல்கத்தாவுடன் இதுவரை 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 6 வெற்றிகளையும், 8 தோல்விகளையும் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x