Published : 08 Apr 2015 09:53 PM
Last Updated : 08 Apr 2015 09:53 PM
ஐபிஎல் 2015-ன் முதல் போட்டியில் 2 ரன்களில் சதம் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டார் ரோஹித் சர்மா. அவர் அபாரமாக விளையாடி 98 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
ஈடன் கார்டன்ஸில் நடைபெறும் இந்த ஐபிஎல் டி 20 போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர் முதலில் மும்பை அணியை பேட் செய்ய களமிறக்கினார்.
மோர்னி மோர்கெலின் அருமையான தொடக்க ஓவர்களில் திணறிய மும்பை இந்தியன்ஸ் அணி 6-வது ஓவரில் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. ரோஹித் மட்டுமே களத்தில் இருந்தார்.
ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச் 5 ரன்கள் எடுத்து, மோர்னி மோர்கெல் வீசிய அவ்வளவாக ஷார்ட் பிட்ச் இல்லாத பந்தை புல் ஆட முயன்றார் பந்து மேலே எழும்பி கேட்ச் ஆனது.
மும்பை வீரர் ஆதித்ய தாரே 7 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசன் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்றார். ஷாகிப் அந்தப் பந்தை நன்றாக தூக்கி வைடாக வீசினார், தாரேயால் அதனை சரிவர மட்டையினால் தொடர்பு படுத்த முடியவில்லை. லாங் ஆஃபில் உமேஷ் யாதவ் கையில் கேட்ச் ஆனது.
அம்பாத்தி ராயுடு அடுத்து களமிறங்கி சோபிக்கவில்லை. அவருக்கு 2 ஸ்லிப்களை நிறுத்தினார் கம்பீர். மோர்கெல் வீசிய பந்தை மட்டையால் தொட்டார் நேராக ஸ்லிப்பில் யூசுப் பதானிடம் கேட்ச் ஆனது. ராயுடு ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டினார். 5.2 ஓவர்களில் 37/3 என்று மும்பை திணறியது.
ஆனால் அதன் பிறகு அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன், கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். இருவரும் இணைந்து 14.4 ஓவர்களில் 131 ரன்களை ஆட்டமிழக்காமல் 4-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. நிச்சயம் இது கொல்கத்தாவுக்கு கடினமான இலக்கு என்றே தெரிகிறது.
ரோஹித் சர்மா 65 பந்துகளில் 12 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோரி ஆண்டர்சன் 41 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிச்கர்களுடன் 55 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
19வது ஓவர் முடிவில் ரோஹித் சர்மா 93 ரன்கள் எடுத்திருந்தார். 20வது ஓவரில் ஆண்டர்சன், ஷாகிபை ஒரு சிக்சர் அடித்தார். பிறகு 2 ரன்கள், பிறகு 1 ரன்.
ரோஹித் பேட் செய்ய வந்து பாயிண்டில் ஒரு பவுண்டரி அடித்து 97-க்கு வந்தார். ஆனால் அடுத்து 5-வது பந்தை மேலேறி வந்து அடித்தார் 1 ரன் மட்டுமே கிடைத்தது இதனால் அவர் 98 ரன்களில் எதிர்முனையில் தேங்கினார். கடைசி பந்தை ஆண்டர்சன் லாங் ஆனில் சிக்ஸ் அடித்து அரைசதத்தை கடந்தார்.
கடைசி 6 ஓவர்களில் 88 ரன்களை விட்டுக் கொடுத்தது கொல்கத்தா. மோசமான பீல்டிங், கோரி ஆண்டர்சன், ரோஹித் சர்மா ஆகியோருக்கு சில கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன. இந்தக் கேட்ச்களை பிடித்திருந்தால் இன்னும் கொஞ்சம் குறைவான ஸ்கோருக்கு மட்டுப்படுத்தியிருக்கலாம்.
கொல்கத்தா அணியில் மோர்னி மோர்கெல் அருமையாக வீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சுனில் நரைன் 4 ஓவர்கள் 28 ரன்கள் விக்கெட் இல்லை. ஷாகிப் 4 ஒவர்களில் 48 ரன்கள் விளாசப்பட, உமேஷ் யாதவ் 3 ஓவர்களில் 36 ரன்கள் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT