Published : 21 Apr 2015 10:18 AM
Last Updated : 21 Apr 2015 10:18 AM
முதல் 4 ஆட்டங்களில் தோற்றதால் ஏற்பட்ட நெருக்கடிக்கு மத்தியிலும் நேர்மறையான எண்ணத்தோடு விளையாடி முதல் வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என மகிழ்ச்சி பொங்க பேசியுள்ளார் மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா.
இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் படுதோல்வி கண்ட மும்பை, நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை தோற்கடித்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா கூறியதாவது:
நாங்கள் மிகச்சிறப்பாக பேட் செய்தோம். அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தாலும் நாங்கள் துவண்டுவிடவில்லை. வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என்ற நேர்மறையான எண்ணத்தோடு இருந்தோம். அதேபோன்று இப்போது சிறப்பாக ஆடி மிகப்பெரிய ஸ்கோரை குவித்து வெற்றி கண்டிருக்கிறோம்.
கடைசிக் கட்டத்தில் பனிப்பொழிவு இருந்தாலும் எங்கள் பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். முதல் 4 ஆட்டங்களிலும் தோற்றிருந்ததால் எங்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. எனினும் இப்போது நேர்மறையான எண்ணத்தோடு சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருப்பதன் மூலம் அதிலிருந்து மீண்டுள்ளோம்.
பலம் வாய்ந்த பேட்ஸ்மேன் களைக் கொண்டுள்ள பெங்களூ ருக்கு எதிராக லசித் மலிங்கா சிறப்பாக பந்து வீச வேண்டும் என்று விரும்பினோம். அவர் மட்டு மல்ல ஹர்பஜன் சிங், மெக்லீனா கான் என அனைவருமே சிறப்பாக பந்துவீசிவிட்டனர் என்றார்.
விராட் கோலி
தோல்வி குறித்து பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி கூறியதாவது: டிவில்லியர்ஸும், டேவிட் வியஸும் அற்புதமான ஓர் ஆட்டத்தை ஆடி எல்லோரையும் மகிழ்வித்தனர். ஆனால் அவர்கள் ஆடிய ஆட்டத்தைத் தவிர மற்ற எல்லா விஷயங்களுமே தவறாகிவிட்டன.
பேட்டிங்கைப் பொறுத்த வரையில் நாங்கள் இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். டிவில்லியர்ஸ், வியஸ் போன்று எல்லோரும் ஆட வேண்டும். பந்துவீச்சு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மேம்படுத்த வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT