Published : 21 Apr 2015 05:29 PM
Last Updated : 21 Apr 2015 05:29 PM
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகளுக்குக் காரணம், மூத்த மற்றும் இளம் வீரர்களிடையே உள்ள அபரிமிதமான தோழமை உணர்வே என்று அந்த அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை ஸ்பான்சர் நிறுவனமான யு.எஸ்.டி. குளோபல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி கூறும் போது, “சென்னை அணியின் சீரான ஆட்டத்துக்கு மூத்த, மற்றும் இளம் வீரர்களிடையே காணப்படும் தோழமை உணர்வுதான் காரணம், இதற்கு பயிற்சியாளர்கள் உதவி புரிந்தனர்.
இளம் வீரர் ஜடேஜா அணிக்கு சிலகாலமாக ஆடி வருகிறார். அதே போல் ஈஷ்வர் பாண்டே, மோஹித் சர்மா, ஆகியோரும் இந்தியாவுக்காக விளையாடுகின்றனர். தவிர பவன் நேகி இருக்கிறார். நிறைய இளம் திறமைகள் உள்ளன. ஆனாலும் பிரெண்டன் மெக்கல்லம் போன்ற மூத்த வீரர்களை உட்கார வைக்க முடியாது, இது எப்பவுமே கடினமான முடிவாகவே இருக்கும்.
மேலும், மைக் ஹஸ்ஸி போன்ற மூத்த வீரர்கள் அணியில் இருப்பது இளம் வீரர்களுக்கு எப்பவும் பயனளிக்கும். இதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். அதனால்தான் எங்கள் அணியில் இளம் திறமைகள் உள்ளன.” என்றார்.
தனது பெண் குழந்தை ஸீவா பற்றிய கேள்விக்கு பதில் அளித்த தோனி, “குழந்தை பிறந்த போது நான் இந்தியாவில் இல்லை. அதனால் பார்க்க முடியவில்லை. அது ஒரு கடினமான காலக்கட்டமே.
குழந்தையின் சிரிப்பு வாழ்க்கையில் மாற்றங்களைத் தரவல்லது. நான் நாட்டுக்காக ஆடுகிறேனா அல்லது எனது உரிமையாளர் அணியான சென்னைக்கு ஆடுகிறேனா என்பதையெல்லாம் குழந்தை அறியாது. அது அழ விரும்பினால் அழும். குழந்தை நமக்கு நல்லுணர்வை ஊட்டக்கூடியது” என்றார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT