Published : 03 Apr 2015 07:04 PM
Last Updated : 03 Apr 2015 07:04 PM
மலேசிய ஓபன் சூப்பர் தொடர் பேட்மிண்டன் போட்டிகளில் சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் நம்பர் 1 சாய்னா நெவால்.
இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சுன் யூ-வை 21-11, 18-21, 21-17 என்ற 3 செட்கள் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார் சாய்னா.
அடுத்ததாக, ஒலிம்பிக் சாம்பியனான சீன வீராங்கனையும், வீழ்த்த மிகக் கடினமானவருமான லீ ஸ்யூருய் என்பரை சாய்னா சந்திக்கிறார்.
இவர் சாய்னா நெவாலை சுமார் 8 முறை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாய்னா இவரை 2 முறை வெற்றி கண்டுள்ளார். முதலில் சிங்கப்பூர் ஓபன் தொடரில் 2010-ம் ஆண்டும், பிறகு 2012 இந்தோனேசிய ஓபன் தொடரிலும் வீழ்த்தியுள்ளார் சாய்னா.
இன்றைய காலிறுதியில் முதல் செட்டில் அபாரமாகத் தொடங்கிய சாய்னா நெவால், 12-4 என்று உச்சத்துக்குச் சென்றார் அதன் பிறகு முதல் செட்டை சுலபமாகக் கைப்பற்றினார்.
ஆனால், 2-வது செட்டில் சீன வீராங்கனை சுன் யூ எழுச்சிபெற்று 7-1 என்று முன்னிலை பெற்றார். ஆனால் சாய்னா விடவில்லை, சில அபாரமான ஆட்டத்தின் மூலம் 14-14 என்று சமன் செய்து அச்சுறுத்தினார். ஆனால் 2-வது செட்டை 18-21 என்று சாய்னா இழந்தார்.
கடைசி செட்டில் சாய்னா 11-4 என்று முன்னிலை பெற்றார். ஆனால் இம்முறை சீன வீராங்கனை விடவில்லை 8 புள்ளிகளிலிருந்து தொடர்ச்சியாக வென்று 14 புள்ளிகளை எட்டினார். இருவரும் ஒரு நேரத்தில் 17-17 என்று கடும் சவாலாகச் சென்றது ஆட்டம்.
ஆனால் அதன் பிறகு சாய்னா 4 புள்ளிகளை தொடர்ச்சியாக வென்று வீழ்த்தினார். இதன் மூலம் ஆதிக்கம் செலுத்தி வரும் சாய்னா அரையிறுதிக்குள் நுழைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT