Published : 18 Apr 2015 10:54 AM
Last Updated : 18 Apr 2015 10:54 AM
சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு நிறைய கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல வேண்டும் என இந்திய வீராங்கனை சானியா மிர்சா விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர் லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றார் சானியா. இதன்மூலம் மகளிர் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கும் சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தாலும், அது போதாது என்ற மனநிலையில் இருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
டென்னிஸில் நிறைய சாதிக்க விரும்புகிறேன். இதுவரை சாதித்தது நிச்சயமாக போதாது. ஓய்வு பெறுவதற்கு முன்பு நிறைய கிராண்ட்ஸ்லாம் பட்டங் களை வெல்ல விரும்புகிறேன். அடுத்ததாக சில பெரிய போட்டிகளில் விளையாடவி ருக்கிறேன். ஸ்டட்கர்ட் போட்டியில் விளையாடுவதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்படுகிறேன் என்றார்.
தரவரிசையில் சானியா முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து அதைக் கொண்டாடுவதற்காக அவருடைய கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான ஷோயிப் மாலிக் டெல்லி வந்துள்ளார். முன்னதாக கராச்சி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஷோயிப் மாலிக்கிடம், சானியா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதே எனக் கேட்டபோது, அதை முற்றிலும் மறுத்த அவர், “சானியாவின் சாதனை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்பதற்காக இந்தியா செல்கிறேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT