Published : 05 Apr 2015 01:06 PM
Last Updated : 05 Apr 2015 01:06 PM
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரே ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
அமெரிக்காவின் மியாமி் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடை பெற்ற அரையிறுதியில் நடப்பு சாம்பியனான ஜோகோவிச் 7-6 (3), 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக் காவின் ஜான் இஸ்னரைத் தோற் கடித்தார். இஸ்னருக்கு எதிராக 10 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்ட ஜோகோவிச், தனது முதல் சர்வீஸில் 80 சதவீதம் வெற்றி கண்டார்.
முர்ரேவுடனான இறுதி ஆட்டம் குறித்துப் பேசிய ஜோகோவிச், “இந்த ஆண்டில் ஏற்கெனவே நாங்கள் இருவரும் இரு முறை மோதியுள்ளோம். அதிலும் ஆஸ்திரேலிய ஓபனின் இறுதி ஆட்டம் மிகப்பெரிய போட்டியாக அமைந்தது. எனவே நாளைய (இன்றைய) ஆட்டம் மிகப்பெரிய சவாலான ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். முர்ரேவின் ஆட்டத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். எனது ஆட்டத்தைப் பற்றி முர்ரேவுக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.
முர்ரே தனது அரையிறுதியில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் தாமஸ் பெர் டிச்சை தோற்கடித்தார். முர்ரேவும், பெர்டிச்சும் இதுவரை 12 ஆட்டங் களில் மோதியுள்ளனர். அதில் இருவரும் தலா 6 வெற்றிகளைப் பெற்றுள்ளனர். 3-வது முறையாக மியாமி ஓபனில் சாம்பியனாவதில் முர்ரே தீவிரமாக உள்ளார். ஆனால் ஜோகோவிச்சோ, அமெரிக்க ஹார்ட் கோர்ட் போட்டிகளான இண்டியன்வெல்ஸ், மியாமி ஓபன் ஆகியவற்றை சேர்த்து (அதாவது ஒரே ஆண்டில் இரண்டிலும் வெல்வது) 3 முறை வென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைக்கும் முனைப்பில் உள்ளார்.
2011-ல் மேற்கண்ட இரு போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற அவர், கடந்த ஆண்டிலும் இரு போட்டிகளிலும் சாம்பியன் ஆனார். இந்த ஆண்டில் இண்டியன்வெல்ஸ் போட்டியில் பட்டம் வென்றுவிட்ட ஜோகோவிச், இப்போது மியாமி ஓபன் முடிவுக் காக காத்திருக்கிறார்.
சானியா ஜோடி அபாரம்
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சானியா-ஹிங்கிஸ் ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் போட்டித் தர வரிசையில் 7-வது இடத்தில் இருந்த ஹங்கேரியின் டிமியா பபோஸ்-பிரான்ஸின் கிறிஸ்டினா மெடினோவிக் ஜோடியை தோற் கடித்தது. சானியா-ஹிங்கிஸ் ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினா-எக்டெரினா மகரோவா ஜோடியை சந்திக்கிறது. போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் எலினா-மகரோவா ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த செக்.குடியரசின் ஆண்ட்ரியா லவக்கோவா-லூஸீ ரடேக்கா ஜோடியை வீழ்த்தியது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பிஎன்பி பரிபாஸ் ஓபனில் எலினா-மகரோவா ஜோடியை வீழ்த்தி சானியா-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் ஆனது. இந்த நிலையில் மீண்டும் அதே ஜோடியை சந்திக்கிறது சானியா ஜோடி. அது தொடர்பாக சானியாவிடம் கேட்டபோது, “கடந்த முறை ஆடிய அதே ஆட்டத்தை இந்த முறையும் வெளிப்படுத்துவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT