Published : 08 Apr 2015 09:36 AM
Last Updated : 08 Apr 2015 09:36 AM

வேகம், விறுவிறுப்பு, சிக்ஸர் மழை: 8-வது ஐபிஎல் இன்று தொடக்கம்

வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு, சிக்ஸர் மழை என கிரிக்கெட் பிரியர்களுக்கு விருந்தளிக்கவுள்ள 8-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதரா பாத் என பலம் வாய்ந்த 8 அணிகள் களத்தில் உள்ளன. மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கொல்கத்தாவில் மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் வரும் 12 முதல் 25-ம் தேதி வரை அங்கு எந்தப் போட்டியும் நடைபெறாது.

இன்று தொடங்கும் இந்த ஐபிஎல் தொடர் மே 24-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 12 மைதானங்களில் நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் மற்ற அணிகளை எதிர்த்து தலா இரு முறை (உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில்) மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் முதல் தகுதிச்சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். அதைத் தொடர்ந்து வெளியேற்றும் சுற்று நடைபெறும். இதில் லீக் சுற்றில் 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடித்த அணிகள் மோதும். அதில் வெற்றி பெறும் அணி, முதல் தகுதிச்சுற்றில் தோற்ற அணியுடன் மோதும். இதற்கு 2-வது தகுதிச்சுற்று என்று பெயர். இதில் வெற்றி பெறும் அணி, 2-வது அணியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். வெளியேற்றும் சுற்றில் தோற்கும் அணி 4-வது இடத்தைப் பிடிக்கும். 2-வது தகுதிச்சுற்றில் தோற்கும் அணிக்கு 3-வது இடம் கிடைக்கும்.

இறுதிச்சுற்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஆனால் பிளே ஆப் சுற்று நடக்கும் இடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளின் ஊர்களில் பிளே ஆப் சுற்று நடத்தப்படும்.

பலம் வாய்ந்த சூப்பர் கிங்ஸ்

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு நிகரான பலம் கொண்டதாக திகழ்கிறது. இரு முறை கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக 2011-ல் சாம்பியன் ஆனது. அதன்பிறகு இரு முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய போதும் கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே இந்த முறை அந்தக் குறையை போக்க தோனி படை முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, பிரென்டன் மெக்கல்லம், டூ பிளெஸ்ஸி, டுவைன் பிராவோ என பலம் வாய்ந்த வீரர்கள் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். உலகக் கோப் பையில் எதிரணிகளை பந்தாடிய மெக்கல்லம், இந்த ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அச்சுறுத்தும் வீரராக திகழ்கிறார்.

பெங்களூர் அணி தொடர்ச்சியாக கலக்கி வந்தாலும், கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டம் மட்டும் அந்த அணிக்கு இதுவரை கிடைக்க வில்லை.

கேப்டன் கோலி, அதிரடி மன்னன் கிறிஸ் கெயில், எந்தத் தருணத்திலும் எதிரணியிடமிருந்து போட்டியைப் பறிக்கும் ஆற்றல் கொண்ட டிவில்லியர்ஸ் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. உலகக் கோப்பையில் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், பெங்களூர் அணியில் இடம்பெற்றிருப்பது அந்த அணிக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

ஷேன் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் வலுவாகவே உள்ளது. ஸ்டீவன் ஸ்மித், சாம்சன், ரஹானே போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், வாட்சன், ஸ்டூவர்ட் பின்னி, ஃபாக்னர், அபிஷேக் நய்யார் போன்ற ஆல்ரவுண்டர்களும் அந்த அணியின் பலமாகத் திகழ்கின்றனர்.

கேப்டன் பெய்லி, டேவிட் மில்லர், மேக்ஸ்வெல், சேவாக், மனன் வோரா, விருத்திமான் சாஹா என வலுவான பேட்டிங் படையைக் கொண்டுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

யுவராஜ் சிங்

புதிய கேப்டன் தலைமையில் களமிறங்குகிறது டெல்லி. அந்த அணியில் வலுவான வீரர்கள் இடம்பெற்றிருந்தாலும் இந்த முறையாவது அதிர்ஷ்டம் கை கொடுக்குமா என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும். கேப்டன் டுமினி, மயங்க் அகர்வால், அல்பி மோர்கல், யுவராஜ் சிங் போன்றோர் அந்த அணியின் பலமாகத் திகழ்கின்றனர். ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள யுவராஜ் ஜொலிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

சன்ரைஸர்ஸ் அணி இந்த முறை புதிய கேப்டனான வார்னரின் தலைமையில் களமிறங்குகிறது. வார்னர், ஷிகர் தவன், கெவின் பீட்டர்சன் போன்ற வலுவான பேட்ஸ் மேன்களும், டிரென்ட் போல்ட், ஸ்டெயின், இஷாந்த் சர்மா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x