Published : 20 Apr 2015 03:44 PM
Last Updated : 20 Apr 2015 03:44 PM
மிர்பூரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தானை வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றி வரலாறு படைத்தது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது போட்டியில் வென்ற வங்கதேசம் நேற்று ஒருநாள் தொடரையும் பாகிஸ்தானுக்கு எதிராக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்களை மட்டுமே எடுக்க, தொடர்ந்து ஆடிய வங்கதேசம் தமிம் இக்பாலின் தொடர்ச்சியான 2-வது சதம் மற்றும் முஷ்பிகுர் ரஹிமின் அரை சதம் ஆகியவற்றால் 38.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 240 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்கதேசம் 2-0 என்று வெற்றி பெற்றுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் தமிம், முஷ்பிகுர் இருவரும் சதம் அடித்து பாக். பந்துவீச்சை சிதறடித்தது நினைவிருக்கலாம். நேற்றும் இதே ஜோடி பாகிஸ்தான் பந்து வீச்சை பதம் பார்த்தது. ஜுனைத் கானை நேராக ஒரு பவுண்டரி அடித்த ‘துவம்ச’ ஷாட்டுக்கு அடுத்ததாக கவர் திசையில் ஒரு பளார் பவுண்டரியையும் விளாசினார் தமிம் இக்பால். ரஹத் அலியை 2 பவுண்டரிகள் ஏற்கெனவே விளாசியிருந்தார் தமிம்.
9-வது ஓவரை சயீத் அஜ்மல் வீச கடைசி 3 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார் தமிம் இக்பால். பிறகு அதற்கு அடுத்த ஓவரே வஹாப் ரியாஸுக்கு இதே கதி ஏற்பட்டது. 3 பவுண்டரிகள் இவர் ஓவரிலும் விளாசினார். இதன் மூலம் 31 பந்துகளில் அரைசதம் எட்டினார் தமிம் இக்பால். குறிப்பாக 2-வது பவுண்டரி வஹாப் ரியாஸின் மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் ஒன்று. மேலேறி வந்து மட்டையை கிடைகோட்டு மட்டத்தில் வைத்து ஒரே விளாசல் நேராக பவுண்டரி.
ஸ்கோர் 14-வது ஓவரில் 100 ரன்கள். 17 ரன்களில் இருந்த மஹமுதுல்லா விக்கெட்டை சயீத் அஜ்மல் பவுல்டு முறையில் வீழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பிய பிறகு அஜ்மல் வீழ்த்தும் முதல் விக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஒருநாள் போட்டியில் முஷ்பிகுர் ரஹிம், அஜ்மலை புரட்டி எடுத்தது நினைவிருக்கலாம். அஜ்மல் அப்போது 10 ஓவர்களில் 74 ரன்களைக் கொடுத்தார். நேற்று 9.1 ஓவர்களில் 49 ரன்களுக்கு 1 விக்கெட்.
முஷ்பிகுர் களமிறங்கினார். அவர் 15 பந்துகளில் 3 ரன்களையே எடுக்க முடிந்தது. அதன் பிறகுதான் அடிக்கத் தொடங்கினார். முதலில் அஜ்மல்தான் சிக்கினார் ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டில் மிட்விக்கெட்டில் மிகப்பெரிய சிக்சரை அடித்தார் முஷ்பிகுர் ரஹிம். அதன் பிறகு ரஹத் அலி சிக்கினார். அவர் ஓவரில் 3 தொடர் பவுண்க்டரிகளை விரட்டினார். ரஹத் அலியின் ஷார்ட் பிட்ச் பந்துகளை நன்றாக ‘கவனித்தார்’ முஷ்பிகுர்.
தமிம் இக்பால் 108 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 100 ரன்களை எட்டினார். அவர் கடைசியில் 17 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 116 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
முஷ்பிகுர் ரஹிம் 70 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்து ரஹத் அலியிடம் ஆட்டமிழந்தார். ஷாகிப் அல் ஹசன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காத நிலையில் வங்கதேசம் 39-வது ஓவரில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
முன்னதாக முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் அசார் அலி, சர்பராஸ் அகமட் இணைந்து திக்கித் திணறி 7.1 ஓவர்களில் 36 ரன்களை எடுத்தனர். சர்பராஸ் அகமட் மட்டையில் விளிம்புகள்தான் விளையாடியது 11 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த அவரது வேதனையை ரூபல் ஹுசைன் முடிவுக்குக் கொண்டு வந்தார்.
அசார் அலி 36 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசனின் திரும்பிய பந்துக்கு அவுட் ஆனார். ஹபீஸ் ரன் எடுக்காமலும் பவாத் ஆலம் ரன் எடுக்காமலும் வெளியேறினர். 13 ரன்கள் எடுத்த புதுமுக வீரர் ரிஸ்வான் ஷாகிப் பந்தில் எல்.பி. ஆகி வெளியேறினார். பாகிஸ்தான் 77/5.
அதன் பிறகு சாத் நசீம் 96 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்தும் வஹாப் ரியாஸ் 40 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாக இருந்தனர். 154/6 என்ற நிலையிலிருந்து இருவரும் 11 ஓவர்களில் 85 ரன்களை ஆட்டமிழக்காமல் 7-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க பாகிஸ்தான் 239 ரன்களை ஒருவழியாக எட்டியது.
ஆட்ட நாயகனாக தமிம் இக்பால் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT