Published : 08 Apr 2015 08:01 PM
Last Updated : 08 Apr 2015 08:01 PM
நியுசவுத்வேல்ஸ் ஸ்கூல் பாய்ஸ் அண்டர்-15 அணியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் மகன் ஆஸ்டின் வாஹ் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால், தன் ஆலோசனைகளை மகன் கேட்பதில்லை என்று ஸ்டீவ் வாஹ் கூறுகிறார். “எல்லா மகன்களையும் போல் இவனும் என் பேச்சைக் கேட்பதில்லை. எனவே இன்னொரு பயிற்சியாளரிடம் நான் நினைப்பதை கூறி ஆஸ்டினிடம் தெரிவிக்கச் செய்கிறேன்.
இந்த அணியில் ஆஸ்டின் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று எனக்கு பதற்றம் அதிகமாக இருந்தது. அதாவது முதன் முதலில் ஆஷஸ் தொடருக்கு நான் தேர்வு செய்யப்படுவேனா என்ற பதற்றம் போல் இது இருந்தது. மேலும் வாஹ் என்ற பெயரில் முதல் எழுத்து டபிள்யூ, எனவே அது பட்டியலில் அகர வரிசைப்படி கடைசியில்தான் வரும். என் மகன் பெயர் வரும் வரை எனக்கு பதற்றம் அதிகமாக இருந்தது.
ஆஸ்டினின் கிரிக்கெட் பயணம் என்னைப் போன்றதாகவே உள்ளது. நான் தொடக்கத்தில் மிகவும் பயப்படுவேன், பதற்றமடைவேன். அப்படியேதான் ஆஸ்டினும் இருக்கிறான். ஆனால் மன உறுதி அவனிடம் இருப்பதை என்னால் கண்டறிய முடிந்துள்ளது.
நான் அவனுக்கு வழங்கிய அறிவுரையில் பிரதானமாகக் கூறியது சக வீரர்களையும், கிரிக்கெட்டையும் மகிழ்ச்சியுடன் அணுக வேண்டும் என்பதே. கிரிக்கெட்டில் நிறைய கணங்கள் நாம் நினைக்கும் படி அமையாது. ஆனால் அணிக்கும், சக வீரர்களுக்கும் நாம் கடமைப் பட்டவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில் அணி என்பது தனித்துவிடப்பட்ட ஒரு இடமாக மாறிவிடும்.
சக வீரர்களின் வெற்றியில் பங்குபெற வேண்டும். ஒவ்வொரு நாளும் ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும். என்று என் மகனிடம் கூறினேன்” என்றார் ஸ்டீவ் வாஹ்.
நியுசவுத்வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் இளையோர் கிரிக்கெட் மேலாளரான மைக்கேல் மேக்கிள்மேன், ஸ்டீவ் வாஹ் மகன் ஆஸ்டின் வாஹ் பற்றிக் கூறும்போது, "ஆஸ்டின் மிகவும் அமைதியான பையன், ஆனால் அடிக்கடி மிகவும் சிறப்பாக ஆட வேண்டும் என்ற அழுத்தத்தை தன்னிடம் ஏற்படுத்திக் கொள்வதாக தெரிகிறது. ஆஸ்டின் சுழற்பந்து வீச்சை மிகச்சிறப்பாக ஆடி வருகிறான். ஆட்டம் பற்றி மிகச் சிறந்த புரிதல் உள்ளது. பந்துகளை நன்றாகக் கணிக்கிறான். மேலும் ஆஸ்டின் ஒரு சிறந்த பீல்டர் என்பதுதான் முக்கியம்.
களத்தில் ஆஸ்டின் நகரும் விதம் உண்மையில் ஒரு மிகச்சிறந்த பீல்டர் உருவாகிவருவதை முன் கணிக்கிறது” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT