Last Updated : 01 Apr, 2015 09:57 AM

 

Published : 01 Apr 2015 09:57 AM
Last Updated : 01 Apr 2015 09:57 AM

2015 உலகக் கோப்பை கிரிக்கெட்- பந்து வீச்சாளர்களின் சாபக்கேடா?

இந்த உலகக் கோப்பையைப் பற்றிப் பேசும் வல்லுனர்கள் பலரும் பந்து வீச்சாளர்கள் மீதான அனுதாபத்தை வெளிப்படுத்துகிறார்கள். இது மட்டையாளர்களுக்கான போட்டி என்கிறார்கள். இது எந்த அளவுக்கு யதார்த்தத்தோடு பொருந்திப் போகிறது?

350-க்கும் மேல் ரன்கள் அதிகம் அடிக்கப்பட்ட உலகக் கோப்பை இதுதான். இரண்டு முறை இரட்டைச் சதம் அடிக்கப்பட்ட தொடரும் இதுதான். ஆனால் பல அணிகள் 150-க்குள் சுருண்டதும் இந்தத் தொடரில்தான் அரங்கேறியது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 408 ரன் அடித்த தென்னாப்பிரிக்கா இந்தியாவுக்கு எதிராக 177 ரன்னுக்குள் சுருண்டது.

பாகிஸ்தான் அணியை 224 ரன்னுக்குள் முடக்கியது இந்தியா. மேற்கிந்தியத் தீவுகள் அணியை 182 ரன்னுக்குள் ஆட்டமிழக்கச் செய்த இந்தியா, அந்த ரன்னைக் கஷ்டப்பட்டுத்தான் எடுத்தது. பாகிஸ்தானை 222 ரன்னில் ஆட்டமிழக்கச்செய்த தென்னாப்பிரிக்கா 202 ரன்னுக்குள் தன் ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

ஆஸ்திரேலியா ஆப்கானிஸ் தானுக்கு எதிராக 417, இலங்கைக்கு எதிராக 376 என்று ரன் குவித்தது. ஆனால் இங்கிலாந்தை 231 ரன்னுக்குள் முடக்கியது. நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 151 ரன்னுக்கு ஆட்டமிழக்க, அந்த ரன்னை அடிக்க 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது நியூஸிலாந்து. தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிவரும் அணிகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இதுபோலவே மட்டையிலும் பந்து வீச்சிலும் தன் வலிமையையும் பலவீனத்தையும் மாறிமாறி வெளிப்படுத்தி வந்தது.

எப்படிப்பட்ட களமாக இருந் தாலும் நன்றாகப் பந்து வீசுபவர் களுக்கும் கவனமாக ஆடித் தன் திறமையை வெளிப்படுத்தும் மட்டையாளர்களுக்கும் வெற்றி கிடைக்கத்தான் செய்கிறது. ஒரு சில விதிவிலக்கான போட்டிகள் நீங்கலாக இதுதான் கிரிக்கெட்டின் யதார்த்தம். அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் குவிக்கப்பட்ட இந்தத் தொடரில் நன்றாகப் பந்து வீசுபவர்களுக்குப் பெரும்பாலும் நல்ல பலன் கிடைக்கத்தான் செய்தது.

ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட், பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் ஆகியோர் எதிரணி களை மிரட்டி வந்தார்கள். இந்தியா ஏழு ஆட்டங்களில் எதிரணியை முற்றிலுமாக ஆட்டமிழக்கச் செய்துள்ளது. பந்துக்கும் இந்தத் தொடரில் இடம் உண்டு என்பதையே இவை காட்டுகின்றன.

எந்த அணியாவது 350, 400 ரன் எடுத்தால் அதில் எதிரணிப் பந்து வீச்சாளர்களுக்கும் ‘பங்கு’ இருக்கும் என்பதே யதார்த்தம். காலிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சை மார்ட்டின் கப்டில் சிதற அடித்தார். நியூஸிலாந்தின் பந்து வீச்சை மேற்கிந்தியத் தீவுகளின் மட்டை யாளர்கள் பதம் பார்த்தனர்.

ஆனால் நியூஸிலாந்து பந்துவீச்சாளர் களால் விக்கெட்டை வீழ்த்த முடிந்ததால் வெல்ல முடிந்தது. அரை இறுதியில் இந்தியாவின் மட்டை வீச்சை ஆஸி பந்து வீச்சு முடக்கியது. இறுதிப் போட்டியிலும் பந்தின் ஆதிக்கமே மேலோங்கி யிருந்தது. எனவே இந்தத் தொடரைப் பந்து வீச்சாளர்களின் சாபம், மட்டையாளர்களின் சொர்க்கம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x