Published : 18 Apr 2015 02:42 PM
Last Updated : 18 Apr 2015 02:42 PM

மே.இ.தீவுகளை தோல்வியிலிருந்து காப்பாற்றிய ஜேசன் ஹோல்டரின் அபார சதம்

ஆண்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் ஜேசன் ஹோல்டர் கடைசியில் இறங்கி அடித்த சதத்தினால் மே.இ.தீவுகள் அரிய டிரா ஒன்றைச் செய்துள்ளது.

வெற்றி பெற 438 ரன்கள் இலக்குடன் 98/2 என்று இறங்கிய மே.இ.தீவுகள் 350/7 என்று ஆட்டத்தை முடிக்க இங்கிலாந்துக்கு வெற்றி மறுக்கப்பட்டது. உண்மையில் மே.இ.தீவுகள் கிரிக்கெட்டுக்கு இது ஒரு மிகப்பெரிய சாதனையே.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது அதிரடி ஆட்டத்தினால் எதிரணியினரை கதிகலக்கிய ஹோல்டர் நேற்று 149 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். தினேஷ் ராம்தின் 57 ரன்களை எடுத்தார். கிமார் ரோச் 55 பந்துகள் தாக்குப் பிடித்து 15 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை:

தினேஷ் ராம்தினுக்கு அருமையான லெக் கட்டரை வீசி எட்ஜ் எடுக்கச் செய்து வீழ்த்தியதன் மூலம் 384-வது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றி இங்கிலாந்தின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் ஆனார். போத்தம் 383 விக்கெட்டுகளை வீழ்த்தி செய்த சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்தார்.

முன்னதாக காலையில் மர்லன் சாமுயெல்ஸின் எட்ஜை பிடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் போத்தம் சாதனையை சமன் செய்தார். ராம்தின் விக்கெட்டை வீழ்த்திய போது ஹோல்டருக்கும், ராம்தினுக்கும் இடையே ஏற்பட்ட 105 ரன்கள் ஜோடியை உடைத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஜேசன் ஹோல்டரின் அருமையான சதம்:

கடைசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 18 ஓவர்கள் மீதமிருந்தது. ஆனால் ஹோல்டர் தனது அருமையான ஆட்டத்தினால் வெற்றியை தடுத்தார். 2 ஓவர்கள் மீதமிருக்கையில் ஜேசன் ஹோல்டர் டிரெட்வெல்லை 2 பவுண்டரிகள் விளாசி 8-வது நிலையில் களமிறங்கி சதம் எடுக்கும் 8-வது மே.இ.தீவுகள் வீரர் ஆனார்.

2012-ல் கொல்கத்தாவில் இந்தியாவை வீழ்த்திய பிறகு அயல்நாட்டில் இங்கிலாந்து டெஸ்ட் வெற்றியை இன்னமும் பெறவில்லை. ஆனால் ஹோல்டருக்கு ஒரு வாய்ப்பும், கிமார் ரோச்சுக்கு ஒரு வாய்ப்பும் கோட்டை விடப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

உணவு இடைவேளைக்கு முன்பாக இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது. 189/6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தில் இன்னமும் 51 ஓவர்கள் மீதமிருந்தன.

அதன் பிறகு ஜேசன் ஹோல்டர், ராம்தின் அபாரமாக ஆடி இங்கிலாந்து வெற்றியை மறுத்தனர். ஹோல்டர் உண்மையில் பேட்ஸ்மென் ஆடுவது போல் ஆடினார். அருமையான தடுப்பாட்டத்தையும் அவ்வப்போது ஆக்ரோஷத்தையும் காண்பித்தார். கபில்தேவ் 1982 தொடரில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு சதம் அடித்து மே.இ.தீவுகளுக்கு வெற்றியை மறுத்தது போன்ற ஒரு இன்னிங்ஸ் ஆகும் இது.

டெவன் ஸ்மித், முதல் இன்னிங்ஸ் சத நாயகன் பிளாக்வுட் ஆகியோர் பொறுப்பற்ற ஷாட் தேர்வில் வெளியேற, அவர்களுக்கு பாடம் புகட்டுவது போல் ஆடினார் ஹோல்டர்.

ஒரு அருமையான தோல்வி தவிர்ப்பு ஆட்டம் ஆகும் நேற்று ஹோல்டர் ஆடியது. இதற்காகவே அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x