Published : 08 Apr 2015 09:40 AM
Last Updated : 08 Apr 2015 09:40 AM
இன்று நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், மும்பை இண்டியன்ஸும் மோதுகின்றன. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த ஆட்டத்தை வெற்றியோடு தொடங்க கொல்கத்தா விரும்பும். அதேநேரத்தில் மும்பை அணியும் வெற்றியோடு தொடங்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரியான் டென் தஸ்சாத்தே, சூர்யகுமார் யாதவ், ஷகிப் அல்ஹசன், பியூஷ் சாவ்லா, சுனில் நரேன், மோர்ன் மோர்கல், உமேஷ் யாதவ் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசன் கொல்கத்தா அணிக்கு சவாலாக இருக்கும் என தெரிகிறது. கடந்த சீசனில் விளையாடிய காலிஸ் இப்போது இல்லை. கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய காரணமான சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் தனது பந்துவீசும் முறையை மாற்றியுள்ளார். இதேபோல் ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளை யாடவிருப்பதால் ஐபிஎல் தொடரில் எல்லா போட்டிகளிலும் ஆடமாட்டார்.
ராபின் உத்தப்பா, கேப்டன் கம்பீர், மணீஷ் பாண்டே, யூசுப் பதான் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர். உத்தப்பா கடந்த சீசனில் 16 ஆட்டங்களில் 660 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.
மும்பை அணியைப் பொறுத்தவரையில் ஆரோன் ஃபிஞ்ச்/சிம்மன்ஸ், பார்திவ் படேல்/ஆதித்ய தாரே, ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, கோரே ஆண்டர்சன், கிரண் போலார்டு, ஸ்ரேயாஸ் கோபால்/பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங், வினய் குமார், லசித் மலிங்கா, ஜேஸ்பிரித் பூம்ரா/அபிமன்யூ மிதுன் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மா, ஆண்டர்சன், போலார்ட், அம்பட்டி ராயுடு, ஆதித்ய தாரே ஆகிய வலுவான பேட்ஸ்மேன்களையும், லசித் மலிங்கா, வினய் குமார், ஹேஸில்வுட், ஹர்பஜன் சிங் போன்ற பவுலர்களையும் கொண்டுள்ளது மும்பை. இரு அணிகளுமே சமபலம் கொண்டவை என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
போட்டி நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT