Published : 17 Apr 2015 06:42 PM
Last Updated : 17 Apr 2015 06:42 PM

பாகிஸ்தான் பந்துவீச்சை புரட்டி எடுத்த தமிம் இக்பால், முஷ்பிகுர் சதங்கள்: வங்கதேசம் 329 ரன்கள் குவிப்பு

வங்கதேசத்துக்கு எதிராக டாக்காவில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 329 ரன்கள் குவித்தது.

வங்கதேச அணியில் ஒரு போட்டியில் 2 பேர் சதம் கண்டது இதுவே முதல் முறை.

புதிய கேப்டன் அசார் அலியின் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சயீத் அஜ்மல் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். ஆனால் அவரது பந்து வீச்சை அடித்து நொறுக்கினர் தமிம் இக்பாலும், முஷ்பிகுர் ரஹிமும். அஜ்மல் 10 ஓவர்களில் 74 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

மீண்டும் வஹாப் ரியாஸ்தான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் இவரும் 60 ரன்கள் பக்கம் விட்டுக் கொடுத்தார். அசார் அலி, சாத் நசீம், ஹாரிஸ் சோஹைல் ஆகிய பகுதி நேர வீச்சாளர்களுக்கு 10 ஒவர்கள் வீசியதில் 79 ரன்கள் விளாசப்பட்டுள்ளது. அசார் அலிக்கு பக்குவம் போதவில்லை. ஆனால் கேப்டனாக அவரது முதல் போட்டியே இது. ஹபீஸ் போன்ற அனுபவமிக்க வீரர்கள் இருந்தும் அசார் அலிக்கு உதவவில்லை.

தமிம் இக்பால் 135 பந்துகளில் 15 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 132 ரன்கள் விளாச, முஷ்பிகுர் ரஹிம் 77 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 106 ரன்களை விளாசினார். இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 21.4 ஓவர்களில் 178 ரன்களை சேர்த்து வங்கதேச புதிய சாதனை படைத்தனர்.

2012-ம் ஆண்டு மே.இ.தீவுகளுக்கு எதிராக 3-வது விக்கெட்டுக்காக அனாமுல் ஹக், முஷ்பிகுர் இணைந்து 174 ரன்கள் எடுத்ததை இன்று தமிம்-முஷ்பிகுர் ஜோடி முறியடித்தது.

நல்ல பேட்டிங் ஆட்டக்களத்தில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். சவுமியா சர்க்கார், தமிம் இக்பால் களமிறங்கினர். ஜுனைத் கான் நீண்ட இடைவெளிக்குப் பின் பந்து வீசினார். ரஹத் அலி இன்னொரு முனையில் வீசினார். 6-வது ஓவரில் சவுமியா சர்க்கார், ரஹத் அலியை 2 பவுண்டரிகள் தொடர்ச்சியாக அடித்தார். 7-வது ஓவர் வஹாப் ரியாஸ் வந்தார். 11-வது ஓவரில் சயீத் அஜ்மல் வீச வந்தார்.

3 பவுண்டரிகள் அடித்து 20 ரன்களுடன் ஆடிவந்த சவுமியா சர்க்கார், வஹாப் ரியாசின் சமயோசிதத்தினால் ரன் அவுட் ஆகி வெளியேறினார். வங்கதேசம் 14-வது ஓவரில் 48/1.

உலகக்கோப்பையில் வங்கதேச அணிக்காக 2 சதங்கள் விளாசிய மஹமுதுல்லா 5 ரன்கள் எடுத்து மஹமுதுல்லா பந்தை ஒதுங்கிக் கொண்டு கவர் திசையில் ஆட முயன்று தோல்வி கண்டார், பந்து மெதுவான பந்து மிடில் ஸ்டம்பைத் தாக்கியது. 20வது ஓவரில் 67/2. இப்போது தமிம் இக்பால் 66 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆடி வந்தார். முஷ்பிகுர் இணைந்தார்.

கேட்ச்களை கோட்டை விட்ட பாக்; முஷ்பிகுர் ரஹிம், தமிம் இக்பால் அதிரடி:

தமிம் இக்பால் 47 ரன்களில் இருந்த போது சாத் நசீம், புல்டாஸை வீச அதனை தமிம் மோசமாக பவுலரிடமே கேட்ச் கொடுக்க, அதனை இடது புறமாக நகர்ந்து கோட்டைவிட்டார் சாத் நசீம். அதன் பிறகு தமிம் இக்பால் 75 பந்துகளில் அரைசதம் கண்டார். சாத் நசீம் தொடர்ந்து மோசமாக வீச முஷ்பிகுர் ரஹிம் 2 பவுண்டரிகளை விளாசினார்.

ஆட்டத்தின் 28-வது ஓவரில் தமீம் முடிவு கட்டினார். ஹாரிஸ் சொஹைல் வீசிய இரண்டு பந்துகளை மிட்விக்கெட்டில் அடுத்தடுத்து சிக்சர்கள் அடித்தார்.

முஷ்பிகுர் ரஹிம் 28 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் இருந்த போது 29-வது ஓவரை பாக். கேப்டன் அசார் அலி வீச, ஸ்லாக் ஸ்வீப் செய்தார் முஷ்பிகுர் பந்து சரியாக சிக்கவில்லை. மிட் ஆனிற்கு சற்று தள்ளி கேட்ச்சாகச் சென்றது, ஜுனைத் கான் ஓடிச் சென்று கையில் வாங்கி விட்டார்.

35-வது ஓவரை வீச சயீத் அஜ்மல் அழைக்கப்பட, தமிம் இக்பால் 2 பவுண்டரிகளையும், முஷ்பிகுர் ரஹிம் 1 பவுண்டரியையும் விளாசினர். முஷ்பிகுர் ரஹிம் 43 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களை எட்டினார். 35-வது ஓவர் முடிவில் வங்கதேசம் 181/2 என்று இருந்தது.

பவர் பிளேயில் 37-வது ஓவரை சயீத் அஜ்மல் வீச, தமிம் இக்பால் 2 முறை மேலேறி வந்து கவருக்கு மேலாகவும், பேக்வர்ட் பாயிண்ட் மேலாகவும் 2 பவுண்டரிகளை அடித்தார். பிறகு மேலேறி வந்து லாங் ஆனில் சயீத் அஜ்மலின் வேதனையை அதிகரிக்குமாறு சிக்ஸ் அடித்தார்.

பவர் பிளே முடிந்த 40-வது ஓவரில் வங்கதேசம் 236/2 அதாவது 5 ஓவர்களில் 55 ரன்களை தமிம் இக்பாலும் முஷ்பிகுர் ரஹிமும் விளாசித் தள்ளியுள்ளனர்.

42-வது ஓவரில்தான் தமிம் இக்பால் 135 பந்துகளில் 15 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 132 ரன்கள் எடுத்த நிலையில் வஹாப் ரியாஸ் ஷார்ட் பிட்ச் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். 75 பந்துகளில் 50 என்றிருந்த தமிம் இக்பால் கடைசி 65 பந்துகளில் 82 ரன்களை விளாசினார்.

43-வது ஓவரை சயீத் அஜ்மல் மீண்டும் வீச முஷ்பிகுர் ரஹிம் ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் ஒன்றையும், டீப் மிட்விக்கெட்டில் மற்றொரு சிக்சரையும் அடித்தார்.

45-வது ஓவரை அஜ்மல் வீச மீண்டும் 2 பவுண்டரிகளை விளாசினார் முஷ்பிகுர் 69-வது பந்தில் சதம் எட்டினார். அதாவது 69 பந்துகளில் 102 ரன்கள். 13 பவுண்டரிகள் 2 சிக்சர்கள். முதல் முறையாக வங்கதேச அணியில் ஒரே ஒருநாள் போட்டியில் 2 வீரர்கள் சதம் கண்டு சாதனை நிகழ்த்தினர்.

ஷாகிப் அல் ஹசன் 27 பந்துகளில் 31 ரன்களையும் சபீர் ரஹ்மான் 7 பந்துகளில் 15 ரன்களையும் அடிக்க வங்கதேசம் 329 ரன்களைக் குவித்தது.

கடைசி 10 ஓவர்களில் 93 ரன்கள் விளாசப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x