Published : 10 Apr 2015 09:52 AM
Last Updated : 10 Apr 2015 09:52 AM

சென்னை ஒரு ரன்னில் வெற்றி: நெஹ்ராவின் நெருக்குதலும் பலனளிக்காத மோர்கெலின் முயற்சியும்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ், டுமினி தலைமை டெல்லி அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற டுமினி முதலில் சென்னையை பேட் செய்ய அழைத்தார். ஒருவரும் அரைசதம் எடுக்காததால் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கூல்ட்டர்-நைல் அபாரமாக வீசி, பிரெண்டன் மெக்கல்லம், ரெய்னா, தோனி ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது.

சென்னை களமிறங்கிய போது மெக்கல்லம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் கூல்ட்டர்-நைல் சாதாரணப்பட்ட பவுலர் அல்ல. முதல் பந்தை மெக்கல்லம் சுற்றினார் மட்டையின் விளிம்பில் பட்டு யுவராஜ் கை வழியாக பவுண்டரி சென்றது. அடுத்த பந்து மீண்டும் கூல்ட்டர் நைல் நல்ல அளவில் வீச் மெக்கல்லமிற்கு இடம் கொடுக்காமல் வீசினார், மெக்கல்லம் மீண்டும் லெக் திசையில் சுற்றினார். பந்து மேலே உயர்ந்தது. யுவராஜ் ஓடிச் சென்று பிடித்தார்.

முன்னதாக முதல் ஓவரில் ஆல்பி மோர்கெலை 3 பவுண்டரிகள் விளாசினார் டிவைன் ஸ்மித், ஒரு லெக் பை பவுண்டரியும் கிடைத்தது. அதிரடித் தொடக்கத்துக்கு அச்சாரமிட்டார் டிவைன் ஸ்மித். ஆனால் கூல்ட்டர்-நைல் அபாரமாக சென்னைக்கு முட்டுக் கட்டை போட்டார்.

சுரேஷ் ரெய்னாவின் ஊரறிந்த பலவீனத்தைப் பயன்படுத்திய கூல்ட்டர்-நைல் சுரேஷ் ரெய்னாவின் ஸ்டம்ப்களை கழற்றினார். இருந்தாலும் ஸ்மித் சில பவுண்டரிகளை அடிக்க 6 ஓவர்களில் ஸ்கோர் 59 ரன்களை எட்டியது. கடைசியில் டிவைன் ஸ்மித் 31 பந்து 34 ரன்களில் இம்ரான் தாஹிரை அடித்து மிட்விக்கெட்டில் கூல்ட்டர்-நைல் கையில் கேட்ச் கொடுத்தார். எனவே முதல் 3 விக்கெட்டுகளில் கூல்ட்டர்-நைல் பங்கு இருந்தது. 8.1 ஒவரில் 71/3 என்று ஆனது சென்னை.

தோனிக்கு முன்னால் இறங்கிய ஜடேஜா 17 ரன்களில் அமித் மிஸ்ராவிடம் வெளியேறினார். அமித் மிஸ்ரா அபாரமாக வீசி பேட்ஸ்மென்கள் மனதில் நிச்சயமின்மைகளை உருவாக்கினார். தோனி வழக்கம் போல் 27 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர் எடுத்து அவுட் ஆனார். டுபிளெஸ்ஸிஸ் 32 ரன்கள் எடுத்தார். அமித் மிஸ்ரா 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்தார். இம்ரான் தாஹீர் அருமையாக வீசி 27 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

கூல்ட்டர் நைல் 4 ஓவர் 30 ரன்களுக்கு 3 விக்கெட். விக்கெட்டுகளை கையில் வைத்துக் கொண்டு கடைசி 5 ஒவர்களில் விளாசும் சென்னை கேப்டன் தோனியின் பிரபல உத்தியின் பாச்சா நேற்று பலிக்கவில்லை. கூல்ட்டர் நைல், இம்ரான் தாஹிர், அமித் மிஸ்ரா ஆகியோர் சிறப்பாக சென்னையைக் கட்டுப்படுத்தினர். ஜாகீர் கான், மொகமது ஷமி இருவரில் ஒருவர் கூட இல்லாமல் களமிறங்கியதன் மர்மம் என்னவென்று புரியவில்லை.

வெற்றி இலக்கான 151 ரன்களுடன் களமிறங்கிய டெல்லி அணியை ஆஷிஷ் நெஹ்ரா தனது தொடக்க ஓவர்களினால் சற்றே பின்னடையச் செய்தார். மாயங்க் அகர்வால் (15), சி.எம்.கவுதம் (4) ஆகியோரை 3 ஓவர்களில் வீழ்த்தினார் டெல்லி 20/2 என்று ஆனது. அறிமுக வீரர் ஷ்ரேயஸ் ஐயர் 7 ரன்களில் வெளியேறினார். 39/3 என்று சரிவு கண்டது. ஜாதவ் (20), மோர்கெல் இணைந்து 8 ஓவர்களில் 48 ரன்களையே சேர்க்க முடிந்தது. ஜாதவ் 20 ரன்களில் மோஹித் சர்மாவிடம் வீழ்ந்தார்.

யுவராஜ் சிங் 6 பந்துகளையே சந்தித்தார். அவர் இறங்கியது முதல் அவர் தலை உயரத்துக்கு பந்து வீச திட்டமிடப்பட்டது போலும். ஒவ்வொரு முறையும் அதனை தரையில் அடிக்க பாடுபட்டார் யுவராஜ். பிராவோவின் ஒரு பவுன்சருக்கு பார்வையை விலக்கி புல் ஆடினார் மிட்விக்கெட்டில் எளிதான கேட்ச் ஆனது. டுமினியும் சோபிக்கவில்லை.

ஒரு முனையில் ஆல்பி மோர்கெல் மட்டும் சென்னையை அச்சுறுத்தினார். அவர் 55 பந்துகளில் 8 பவுண்ட்ரி 1 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

கடைசி ஓவரில் வெற்றி பெற 19 ரன்கள் தேவை. பிராவோ வீசினார். முதல் பந்து ஒரு அதிர்ஷ்ட பவுண்டரி. 3-வது பந்தில் இம்ரான் தாஹிர் அவுட். ஆனால் ஆல்பி மோர்கெல் கிராஸ் செய்து பேட்டிங் முனைக்கு வந்தார். லெந்தில் கொண்டு போய் வீச மோர்கெல் அதனை எளிதாக சிக்ஸ் அடித்தார். 5-வது பந்து பாயிண்ட் திசையில் தூக்கி அடித்தார் மோர்கெல், ரெய்னாவின் அபார பீல்டிங்கினால் 2 ரன்கள் தடுக்கப்பட்டது. இது பவுண்டரி ஆகியிருந்தால் கடைசி பந்தில் 4 ரன்களே தேவைப்பட்டிருக்கும். ஆனால் ரெய்னாவின் அருமையான பீல்டிங்கினால் அது 2 ரன்களாக மாற்றப்பட்டதால் கடைசி பந்தில் சிக்சர் தேவைப்பட்டது.

லெந்த் பந்தை ஆஃப் திசையில் தூக்கி அடித்தார் ஆனால் பவுண்டரிக்கு முன்னால் பிட்ச் ஆகி சென்றது 4 ரன்கள் மட்டுமே கிடைக்க ஒரு ரன்னில் போட்டியை இழந்தது டெல்லி.

ஆட்ட நாயகனாக நெஹ்ரா தேர்வு செய்யப்பட்டார். ஜடேஜா பந்து வீச அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் 4 ஓவர்களில் 25 ரன்கள் ஒரு விக்கெட். நெஹ்ரா 25 ரன்களுக்கு 3 விக்கெட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x