Published : 11 Mar 2015 12:01 PM
Last Updated : 11 Mar 2015 12:01 PM

சிறந்த ஒருநாள் வீரர் யார்?- சச்சினை வீழ்த்திய ரிச்சர்ட்ஸ்

இஎஸ்பிஎன் கிரிக்இன்போவின் 'கிரிக்கெட் மன்த்லி' இதழ் சார்பில் உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் யார் என்பது குறித்து கிரிக்கெட் நிபுணத்துவம் மிக்க 50 பேர் கொண்டு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. அதில் மேற்கிந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைசிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு 179 புள்ளிகள் கிடைத்துள்ளன.

ரிச்சர்ட்ஸுக்கு அடுத்தபடியாக சச்சின் 68 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், வாசிம் அக்ரம் 66 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், கில்கிறிஸ்ட் 28 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும், இந்திய அணியின் தற்போதைய கேப்டன் தோனி 25 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

வர்ணணையாளர்கள், முன்னாள் வீரர்கள், எழுத்தாளர்கள் என 50 பேர் கொண்ட குழு இந்தத் தேர்வை செய்துள்ளது. 50-ல் 29 பேர் விவியன் ரிச்சர்ட்ஸை தேர்வு செய்துள்ளனர். 70 - 80களில் ஆதிக்கம் செலுத்திய ரிச்சர்ட்ஸ், வெவ்வேறு சூழல்களில் விளையாடி, பல்வேறு விதமான பந்துவீச்சை எதிர்கொண்டவர். ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் இருந்தபோதும், இல்லாதபோதும் சிறப்பாக விளையாடியவர்.

இது பற்றி முன்னாள் நியூஸிலாந்து வீரர் மாட்ரி க்ரோ கூறுகையில், "3-வது அல்லது 4-வது வீரராக களமிறங்கிய ரிச்சர்ட்ஸ், சராசரியாக 47 ரன்களாக இருந்தது. ஸ்ட்ரைக் ரேட் 90 சதவீதமாக இருந்தது. 15 வருடங்கள் அவர் ஆதிக்கம் செலுத்தினார்" என்றார்.

குறிப்பாக, வேகமோ, சுழலோ எந்த பந்துவீச்சுக்கு எதிராகவும் ரிச்சர்ட்ஸ் ஹெல்மெட் அணிந்து விளையாடியதில்லை. அப்படி விளையாடியது தனக்கு தன்னம்பிக்கை ஊட்டியதாகவும், ஹெல்மெட் இன்றி விளையாடும் போது, நாம் எதற்கும் தயாராக இருக்கிறோம் என மறைமுகமாக பந்துவீச்சாளர்க்கு தெரிவிக்கும்" என்று கூறியுள்ளார்.

இதேபோல வாக்குப்பதிவு, கிரிக் இன்போ வாசகர்களிடமும் நடத்தப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 6 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. சச்சின் டெண்டுல்கர் 2,39,000 வாக்குகளுடன் முதல் இடத்தையும், வாசிம் அக்ரம் 2,25,000 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x