Published : 15 Mar 2015 04:43 PM
Last Updated : 15 Mar 2015 04:43 PM
உலகக் கோப்பை கிரிக்கெட் பி - பிரிவு கடைசி லீக் ஆட்டத்தின் வாழ்வா? சாவா? போட்டியில், அயர்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் சற்றே எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
பாகிஸ்தான் தனது காலிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை சந்திக்கவுள்ளது.
3 லீக் போட்டிகளில் வென்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் பின்னடவைச் சந்தித்ததால், காலிறுதி செல்லும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணியிடம் அயர்லாந்து இழந்தது.
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 238 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 46.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அந்த அணியில் துவக்கம் மிகச் சிறப்பாக இருந்தது. ஷேஸாத்தும் அகமதும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 120 ரன்களைச் சேர்த்தனர். ஷேஸாத் 63 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து சோஹைல் 3 ரன்களில் ஆட்டமிழக்க, மிஸ்பா உல் ஹக்குடன் ரன் குவிப்பைத் தொடர்ந்தார் அகமது.
மிஸ்பா உல் ஹக் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அகமது கடைசி வரை ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்தார். உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் சேர்த்தார்.
அயர்லாந்து தனது இன்னிங்ஸ்சில், 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் சிறப்பாக பேட் செய்து 107 ரன்கள் குவித்தார். வில்சன் 29 ரன்கள் சேர்த்தார். ஏனையோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ரன் சேர்க்கவில்லை.
மேற்கிந்திய தீவுகளுக்கு 'நிம்மதி' வெற்றி
அடிலெயெடில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பி - பிரிவு லீக் ஆட்டத்தில், யு.ஏ.இ. அணியை 117 பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
ரன் ரேட் அதிகம் பெற்று ஈட்டிய இந்த வெற்றியால், புள்ளிப் பட்டியலில் அயர்லாந்தைப் பின்னுக்குத் தள்ளி காலிறுதி வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி.
இந்தப் போட்டியில் 176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 30.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. அணியில் அதிகபட்சமாக சார்லஸ் 55 ரன்களையும், கார்ட்டர் ஆட்டமிழக்காமல் 50 ரன்களையும் சேர்த்தனர். ரம்தீன் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் சேர்த்தார்.
யு.ஏ.இ. தனது இன்னிங்ஸ்சில் 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, நசீர் அஜீஸ் 60 ரன்களையும், அம்ஜத் ஜாவீத் 56 ரன்களையும் எடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், டெய்லர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரஸல் 2 விக்கெட்டுகளையும், சாமூவேல்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்:
பிரிவு ஏ: நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம்
பிரிவு பி: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT