Published : 01 Mar 2015 12:19 PM
Last Updated : 01 Mar 2015 12:19 PM
இங்கிலாந்து நிர்ணயித்த 310 ரன்கள் வெற்றி இலக்கை இலங்கையின் சங்கக்காரா, திரிமானி ஆகியோர் தங்களது சதங்கள் மூலம் ஊதித் தள்ளினர்.
வெலிங்டனில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து 309 ரன்கள் குவித்தும் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
நல்ல பேட்டிங் ஆட்டக்களத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சரியாகவே பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியின் ஜோ ரூட் 121 ரன்களை எடுக்க இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, சங்கக்காரா (117 நாட் அவுட், 86 பந்துகள் 11 பவுண்டரி 2 சிக்சர்கள்), மற்றும் திரிமானி (139 நாட் அவுட், 143 பந்துகள், 13 பவுண்டரி 2 சிக்சர்) ஆகியோரின் அனாயாச சதங்களினால் 47.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
சங்கக்காரா சாதனை:
சங்கக்காரா அடுத்தடுத்து சதங்களை எடுத்துள்ளார். முதலில் 73 பந்துகளில் சதம் எடுத்து ஒருநாள் போட்டிகளில் அவர் அதிவேக சதம் கண்டார். இன்று இங்கிலாந்துக்கு எதிராக 70 பந்துகளில் சதம் கண்டு அவர் சாதனையையே அவர் முறியடித்தார்.
உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் 1258 ரன்களுடன் தற்போது சங்கக்காரா, லாராவை (1225 ரன்கள்) பின்னுக்குத்தள்ளி3ஆம் இடம் பிடித்தார். சச்சின் 2278 ரன்களுடன் முதலிடம், ரிக்கி பாண்டிங் 1743 ரன்களுடன் 2ஆம் இடம்.
முதல் கோணல் முற்றிலும் கோணல்:
நல்ல பேட்டிங் பிட்சில் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் நவீன கிரிக்கெட்டின் காலத்திற்கு சற்று முந்தைய கால மன நிலையில் ஆடினர். பந்துவீச்சில் எந்த வித பரிசோதனையும் இல்லை. ஆண்டர்சன், ஃபின், பிராட், வோக்ஸ் ஆகியோர் ஒரேமாதிரியான பவுலர்களே. ஆட்டத்தின் எந்த நேரத்திலும் விக்கெட்டுகள் எடுக்கும் நிலையில் இல்லை. இதில் 4-வது ஓவரில் சதநாயகன் திரிமானிக்கு கேட்ச் ஒன்றை கோட்டை விட்டனர்.
பிராட் வீசிய பந்தை திரிமானி ஒரு ஒன்றுமில்லாத ஷாட்டை ஆட பந்து விளிம்பில் பட்டு பின்னால் சென்றது, பட்லருக்கு இடது புறம் சென்றது. அவர் ஒன்றுமே செய்யவில்லை, ரூட் கேட்சைக் கோட்டைவிட்டார். கண்களுக்கு ரூட் விட்ட கேட்ச் அது. ஆனால் உணர்வு ரீதியாகப் பார்த்தால் அது விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரின் தவறுதான். முதல் கோணல் முற்றிலும் கோணலான கதைதான் இன்று இங்கிலாந்துக்கு நடந்தது.
பிறகு இலங்கையின் ஸ்கோர் 226 ரன்களாக 38-வது ஓவரில் இருந்த போது திரிமானி 98 ரன்களில் இருந்தார். அப்போது ஆண்டர்சன் வீசிய பந்தை கவர் திசையில் ஏந்தினார் திரிமானி. கையில் விழுந்த கேட்சை நழுவ விட்டார் மொயீன் அலி. முதலில் பிடித்திருந்தால் சங்கக்காராவுக்கு நெருக்கடி கொடுத்து வீழ்த்தியிருக்கலாம். 38-வது ஓவரில் கேட்சைப் பிடித்திருந்தாலும் புதிதாக வரும் பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம் அதுவும் இல்லாமல் போனது. அப்போது 12 ஓவர்களில் வெற்றிபெற 84 ரன்கள் தேவை. புதிய பேட்ஸ்மென்கள் இறங்கியிருந்தால் சிலபல ரன் இல்லாத பந்துகளை வீசி நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் இங்கிலாந்து அணியிடமோ, கேப்டன் மோர்கனிடமோ எந்த வித தீவிரமும் இல்லை.
தொடக்கத்திலிருந்தே தள்ளி வைக்கப்பட்ட பீல்டிங். ஸ்கொயர் பவுண்டரிகள் மிகவும் குறுகியதாக இருப்பதைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாத ஷாட் பிட்ச் பந்து வீச்சு என்று இங்கிலாந்து சொதப்பியது ஏராளம். அந்த அணியில் ஒரு ‘ஜெண்டில்மேன்’ கேப்டன் போய் மற்றொரு ‘ஜெண்டில்மேன்’கேப்டன் மோர்கன் வந்துள்ளார். முற்றிலும் அணுகுமுறை மாற்றம், உத்தி மாற்றங்கள் அந்த அணிக்குத் தேவைப்படுகிறது.
தில்ஷன், திரிமானி அபாரத் தொடக்கம்:
கேட்ச் விட்டதுதான் அதன் பிறகு 19 ஓவர்களில் தில்ஷன், திரிமானி 100 ரன்களை எட்டினர். கேட்ச் விட்டதில் கடுப்பாகி பிராட் பந்துவீச்சு சிதைந்தது. அவரை தில்ஷன் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் விளாசினார். ஷார்ட் பவுண்டரியை வைத்துக் கொண்டு ஷாட் பிட்ச் போட்டால், இரண்டும் ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ்.
55 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 44 ரன்கள் எடுத்து மொயீன் அலி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகாவது நெருக்கடிகொடுத்திருக்க வேண்டும், ஆனால் துணைக் கண்ட வீரர்கள் என்றால் ஷார்ட் பிட்ச் பந்துகளை விளையாடத் தெரியாது என்ற பழைய ஃபார்முலாவில் சங்கக்காராவுக்கு (இத்தனைக்கும் சங்கக்காரா இங்கிலாந்தை ஏற்கெனவே பிய்த்து உதறியிருக்கிறார்) படுமோசமாக வீசினர். மொயீன் அலி கூட ஷாட்டாக வீசினார் அதனை பவுண்டரிக்கு விரட்டியே சங்கக்காரா இன்னிங்ஸை தொடங்கினார். மீண்டும் மீண்டும் ஷாட் பிட்ச், சிக்சர், பவுண்டரி வரத் தொடங்கியது. ஸ்டீவ் ஃபின் வீசிய பந்தை நடந்து வந்து எக்ஸ்ட்ரா கவரில் சங்கா அடித்த சிக்ஸ் இங்கிலாந்தின் பந்துவீச்சை அவர் எந்த அளவுக்கு மதித்தார் என்பதன் அளவுகோல்.
45 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் சங்கக்காரா அரைசதம் எட்டினார். மறுமுனையில் திரிமானி 96 ரன்களில் இருந்தார். பிறகு 117 பந்துகளில் 10 பவுண்டரி ஒரு சிக்சருடன் சதம் எட்டினார். 2 கேட்ச்கள் இவருக்கு நழுவ விடப்பட்டது. ஆண்டர்சன், வோக்ஸ் ஆகியோர் தொடர்ந்து ஷாட் பிட்சாக வீச 5 பவுண்டரிகளை விளாசினார் சங்கக்காரா. 45 பந்துகளில் அரைசதம் கண்ட சங்கக்காரா அடுத்த 25 பந்துகளில் மேலும் 50 ரன்களை எடுத்து சதம் கண்டார். அவரது அதிவேக ஒருநாள் சதம்.
கடைசியிலும் திரிமானிக்கு பவுண்டரியில் ஒரு கேட்ச் விடப்பட்டது. ஜோஸ் பட்லர் பை வகையில் 4 ரன்களை விட்டார். இங்கிலாந்து சுத்தமாக ஒரு அறுவையான அணி என்பது போல்தான் ஆடியது. இறுதியில் 48-வது ஓவரில் வோக்ஸ் பந்தை திரிமானி அலட்சியமாக லாங் ஆனில் சிக்ஸ் அடித்து வெற்றி இலக்கைக் கடந்து சென்றார். இங்கிலாந்து அணியில் மொயீன் அலி தவிர அனைவரும் ஒரு ஓவருக்கு 6 மற்றும் அதற்கு மேல் ரன்களை விட்டுக் கொடுத்தனர்.
இங்கிலாந்து பேட்டிங்:
முதலில் இங்கிலாந்து அபாரமாக தொடங்கியது 9 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்தது. இயன் பெல் 49 ரன்களையும், மொயீன் அலி 15 ரன்களையும் எடுத்தனர். அதன் பிறகு மொயீன் அலி (15) மேத்யூஸிடம் வீழ்ந்தார். கேரி பாலன்ஸ் 6 ரன்களில் தில்ஷன் பந்தில் அவுட் ஆனார். பெல் சுரங்க லக்மலிடம் வீழ்ந்தார். 101/3 என்ற நிலையில் ஜோ ரூட், மோர்கன் (27) சேர்ந்து 60 ரன்களை 14.1 ஓவரில் எடுத்தனர். மோர்கன் பெரேராவிடம் வீழ்ந்தார். அதன் பிறகு ஜோ ரூட்டுக்கு ஆட்டம் பிடிக்க ஜேம்ஸ் டெய்லர் (25) இணைந்து ஸ்கோரை 259 ரன்களுக்கு உயர்த்துமாறு 98 ரன்களை 11 ஓவர்களில் சேர்த்தனர். ஜோ ரூட் 100 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார்.
கடைசியில் ஜோ பட்லர் 19 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 39 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து முதல் பவர் பிளேயில் 62 ரன்கள். 11-35 வரை ரன் விகிதம் 3.96, கடைசி 10 ஓவர்களில் 10 ரன்களுக்கும் மேல்.
இடைப்பட்ட ஓவர்களில் மேத்யூஸ், (10 ஓவர் 43 ரன் 1 விக்) தில்ஷன் (8.2ஓ, 35 ரன் 1 விக்), ஆகியோரும் ஹெராத் ஓரளவுக்கும் பெரேரா ஓரளவுக்கும் கட்டுப்படுத்தினர். மலிங்கா சோபிக்கவில்லை. 10 ஓவர்களில் 63 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். சுரங்க லக்மலுக்கு இன்று சாத்துப்படி நடந்தது. 7.4 ஓவரில் 71 ரன்களை விட்டுக் கொடுத்தார் லக்மல்.
இந்த ஓவர்களில் இங்கிலாந்து 5 ரன்களுக்கு மேல் குவித்திருந்தால் ஆட்டம் இன்னும் நெருக்கமாகச் சென்றிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம். ஆனால்... இங்கிலாந்து சொதப்பிய சொதப்பலில் எந்த இலக்கும் கூட இலங்கைக்கு இன்று எளிதாகவே அமைந்திருக்கும்.
ஆட்ட நாயகன் சங்கக்காரா. இலங்கை பிரிவு ஏ-யில் 4-இல் 3-ஐ வென்று 6 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது. நிகர ரன் விகிதம். +0.128. இங்கிலாந்தூ 4-இல் 3ஐ தோற்று ஸ்காட்லாந்துக்கு மேல் உள்ளது அவ்வளவே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT